முன்னறிவிப்பில்லாத திடீர் பயணமாக உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னறிவிப்பில்லாத திடீர் பயணமாக உக்ரைன் சென்றார். ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டை எட்ட உள்ள நிலையில், இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி வரவேற்றனர்.
பார்வையாளர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்த ஜோ பைடன், 2014-ல் கிரிமியாவை ரஷ்யா இணைந்தபோதில் இருந்து உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் நினைவிடத்தில் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ரஷ்யாவின் ஏவுகணை அல்லது வான்வழித் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், ஜோ பைடன் சென்றதில் இருந்து தலைநகர் கீவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன வண்ணம் இருந்தன.
ரஷ்யா மீது அதிக தடைகளை ஜோ பைடன் அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில், இந்தப் பயணத்தின்போது பீரங்கி வெடிபொருட்கள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஆதரவை உக்ரைனுக்கு அதிபர் ஜோ பைடன் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
Comments