பெண் பைனான்ஸியரை கூலிப்படை ஏவி கொன்ற வளர்த்த கடா..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அடியாளை முதலாளியாக்கி விட்டு, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட பெண் பைனான்ஸியரை வளர்த்த கடா மாரில் பாய்ந்த கதையாக, கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் 60 வயது செல்லம்மாள்.
கணவர் சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, மகனும், மகளும் திருமணமாகி வெளியூருக்கு சென்று விட்டதால், செல்லம்மாள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
பிப்ரவரி 13ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் செல்லம்மாள் இறந்து கிடந்தது குறித்து உத்தப்பநாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்லம்மாள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரிய வந்ததால், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கொலை நடந்த நாளில் அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்ற போதே, அதேப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், அப்பகுதி விஏஓவிடம் சரணடைந்தார். குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
வட்டித்தொழில் செய்து வந்த செல்லம்மாள், குணசேகரனை அடியாளாக பயன்படுத்தி வந்துள்ளார். கொடுத்த வேலையை சரியாக செய்து வந்த குணசேகரன் மீது நம்பிக்கை வந்ததால், தனது பணத்தை மொத்தமாக கொடுத்து, அவரை வட்டிக்கு விட வைத்து, குறிப்பிட்ட தொகையை செல்லம்மாள் மாதந்தோறும் பெற்று வந்தார்.
இதனால், அடியாள் குணசேகர், முதலாளியாக மாறி கூடுதல் வட்டிக்கு விட்டு, சொகுசு வாழ்க்கை வாழத் துவங்கினார்.
இந்நிலையில், செல்லம்மாளின் மகளுக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் தேவைப்பட, குணசேகரனிடம் கேட்டபோது அவர் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து மொத்த பணத்தையும் தந்து விட்டு கணக்கை முடித்துக்கொள்ளுமாறும், வட்டி தொழிலை பேரனிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் செல்லம்மாள் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த குணசேகரன், செல்லம்மாளை தீர்த்துக் கட்ட முடிவெடுத்து, கரூரில் மரப்பட்டறை நடத்தி வரும் உத்தப்ப நாயக்கனூரை சேர்ந்த சுந்தருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவியுள்ளார்.
சுந்தரும், தனது கடையில் வேலை செய்யும் மாரிமுத்து, விக்னேஷ், சதீஷ் மற்றும் குணசேகரனுடன் உத்தப்பநாயக்கனூர் சென்று தனியாக இருந்த செல்லம்மாள் கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. விக்னேஷ், மாரிமுத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவான சுந்தர், சதீஷை தேடி வருகின்றனர்.
வளர்த்த கடாவே செல்லம்மாளை தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments