வானம் தொட்டு போனான்.. மானம் உள்ள சாமி.. மயில்சாமி காலமானார்..!
தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். பல குரல் கலைஞராக புகழ்பெற்று திரையில் காமெடி நடிகராக உயர்ந்தாலும், நிஜத்தில் இருப்பதை கொடுக்கும் வள்ளல் போல் வாழ்ந்த மயில்சாமியின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தமிழகத்தின் சத்தியமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர் மயில்சாமி. ஆரம்பத்தில் பல் குரல் கலைஞராக மேடைகளில் கலக்கிய மயில்சாமி , கன்னிராசி உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து தமிழ் திரை உலகில் நுழைந்தார்.
கங்கை அமரனின் கச்சேரியில் ஆஸ்தான மிமிக்கிரி கலைஞராக மேடையேறிய மயில்சாமியின் திறமை அவரை விவேக் குழுவில் சேர்த்தது. விவேக்குடன் இணைந்து மயில்சாமி செய்த கதாபாத்திரங்கள் ரசிகர்களை ரசித்து சிரிக்க வைத்தது.
விவேக் மட்டுமில்லாமல் வடிவேலுவுடனும் காமெடி கச்சேரி நடத்தியவர் மயில்சாமி.
விஷால் , தனுஷ் என பல்வேறு நாயகர்களுடனும் இணைந்து கலகலப்பூட்டியவர் மயில்சாமி.
சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டாலும், நிஜத்தில் ஆன்மீகம் மற்றும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட மயில்சாமி , மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர். சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தினமும் தனது செலவில் மாலை அணிவித்து வந்தவர்.
இயலாவிட்டாலும், இல்லாதவர்களுக்கு கடன் வாங்கியாவது உதவி செய்யும் வள்ளலாக வலம் வந்த வெள்ள மனசுக்காரர் மயில்சாமி என்று ஒரு முறை நடிகர் விவேக்கால் பாராட்ட பட்டவர்.
கடந்த சட்ட மன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார்.
தனது இரு மகன்களில் ஒருவரான அன்பு வை நாயகனாக்கி அழகு பார்க்க நினைத்த மயில்சாமிக்கு கடந்த 10 வருடங்களாக அது வலி நிறைந்த போராட்டமாகவே மாறிவிட்டது.
இந்த நிலையில் சிவராத்திரியை யொட்டி கேளம்பாக்கம் மேக நாதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த மயில்சாமி அதிகாலை 3:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.
சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய மயில்சாமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , வரும் வழியிலேயே மயில்சாமியின் உயிர் பிரிந்து விட்டதாக கூறினர்.
வாழ்ந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப வாழ்ந்து தனது 57 வது வயதில் மறைந்த மயில்சாமியின் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்த உயிரிழப்புகள் தமிழ் திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Comments