காதலிச்சா விட்டுறனுமோ.. எங்க வீட்டு பொண்ணு இனி எங்களுக்குத்தான்..! வீடு புகுந்து கடத்தும் காட்சிகள்..
கூடங்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை, கணவனின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி கடத்திச்சென்றது தொடர்பாக, பெண்ணின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகனும், அதே தெருவை சேர்ந்த 19 வயது சுமிதாவும் காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
மகள் கடத்தப்பட்டதாக, கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண்ணின் தாயார் பத்மா கொடுத்த புகாரின் பேரில் சுமிதாவை கூடங்குளம் போலீசார் தேடி வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சுமிதா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் மேஜர் என்பதால் காதல் கணவர் முருகனுடன் செல்ல விரும்புவதாகவும் கூறியதால் அவர் விருப்பப்படி செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. சில வாரங்களாக சென்னையில் தங்கி இருந்த முருகன் - சுமிதா காதல் தம்பதி சம்பவத்தன்று சொந்த ஊரான ஸ்ரீ ரங்க நாராயணபுரத்திற்கு வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சுமிதாவின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர், முருகன் வீட்டிற்குள் புகுந்தனர். கணவர் முருகன் மற்றும் வீட்டில் உள்ளவர்களை தாக்கி, சுமிதவை கதற கதற பிடித்து இழுத்து தூக்கிச் சென்றனர். தங்கள் வீட்டுப்பெண்ணை தங்கள் வீட்டுக்கு கூட்டிச்செல்வதாக கூறிச்சென்றனர்.
கத்திக்கூச்சலிட்டபடியே இருந்த சுமிதாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூடங்குளம் போலீசில் முருகன் புகார் அளித்தார். சுமிதாவின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், சுமிதாவை காரில் தூக்கிபோட்டு வெளியூருக்கு கடத்திச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இதே போல தென்காசி மாவட்டத்தில் இருந்து குஜராத்துக்கு கடத்திச்செல்லப்பட்ட காதல் திருமணம் செய்த பெண்ணான குருத்திகா என்பவர் சில வாரங்கள் கழித்து தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும், தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறி நீதிமன்றத்தை குழப்பி வருவது குறிப்பிடதக்கது.
Comments