மாமூல் போலீசுக்கு வெங்காய விவசாயி வைத்த மறியல் செக்.. கையை நீட்டமாட்டோம் என ஓட்டம்..!

0 8222

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சியில் வெங்காய லோடு ஏற்றிச்சென்ற வண்டியை மறித்து மாமூல் கேட்ட போலீஸை கண்டித்து, விவசாயிகள் சாலையை மறித்ததால், இனி விவசாய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்த மாட்டோம் என கெஞ்சும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி பகுதியில் புதுசத்திரம் போலீசார் தினந்தோறும் மாலை வேளைகளில் விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் ஆட்டோ, லாரிகள் , டெம்போ போன்றவற்றை நிறுத்தி 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மாமுல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வழியாக வெங்காய லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தை மறித்து உதவி ஆய்வாளர் ஒருவர் மாமூல் கேட்டு கையை நீட்ட, ஆத்திரமடைந்த விவசாயி, சாலையில் குறுக்கே சரக்கு வாகனத்தை நிறுத்தி ஆவேசமானார்.

வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காமல் நொந்து போயுள்ள விவசாயிகள், வாகன வாடகை கூட முறையாக தர முடியாத சூழலில் தவிக்கும் நிலையில், எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும், மாமூல் கேட்பது ஏன் ? என கேட்டு, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாமூலுக்காக போலீசார் கை நீட்டுவது தொடர்வதால் ஆத்திரமடைந்த அந்த பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்ததால், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் நடுரோட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் செய்த விவசாயிகளிடம் இனி விவசாய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்த மாட்டோம் என காவல்துறையினர் உறுதி அளித்ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments