ஐ எம் சோ டயர்டு... திருட சென்ற வீட்டில் மெத்தையில் உறங்கிய திருடர்.. கதவை உடைத்து பிடித்த போலீஸ்..!

0 2060

காரைக்குடி அருகே திருடச் சென்ற வீட்டிற்குள் தண்ணி அடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடனை கதவை உடைத்து காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். ஓட்டை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து பொருள்களை எல்லாம் எடுத்து வைத்த களைப்பில் தூங்கிய கொள்ளையன், கதவை உடைத்து பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

மாமியார் வீட்டுக்கு விருந்து வந்த மாப்பிள்ளை கறி சோறை ஒரு பிடி பிடித்து விட்டு உறங்குவது போல மெத்தையில் துயில் கொள்ளும் இவர் தான் டயர்டு கொள்ளையர் சுதந்திர திரு நாதன்..!

காரைக்குடி பர்மா காவல் நிலையம் அருகே வசித்து வருபவர் வெங்கடசன். இவரது சொந்த ஊர் நடுவிக்கோட்டை. இங்குள்ள பூர்வீக வீட்டின் வெளிப்பக்க கேட், திறந்திருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

காரைக்குடியில் இருந்து விரைந்து சென்ற வெங்கடேஷ் வீட்டு கதவை திறக்க முயன்ற போது கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . அதனைத் தொடர்ந்து உடனடியாக நாச்சியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அதே ஊரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சுதந்திர திருநாதன் மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையன், முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேகரித்து மூட்டையாக கட்டி வைத்துவிட்டு மகிழ்ச்சியில் மது அருந்தி உள்ளான்.

போதையில் காதில் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டபடி அங்கிருந்த கட்டிலின் மேல் உள்ள மெத்தையில் படுத்ததால் திருடிய களைப்பில் சுதந்திர திருநாதன் அயர்ந்து தூங்கியது தெரியவந்தது.

காவல் துறையினர் அவனைத் தட்டி எழுப்பியதும் ஒன்றும் அறியாதது போல் திடுக்கிட்டு விழித்த சுதந்திர திரு நாதனை ஊர் பொதுமக்கள் சுளுக்கெடுத்தனர்

ஊர் பொதுமக்களிடமிருந்து டயர்டு கொள்ளையனை மீட்ட காவல் துறையினர் , அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். வீட்டுக்குள் திருட வந்ததே தப்பு , அதிலும் மெத்தையில் படுத்து உறங்கியதால் நாலு அப்பு அப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments