விரட்டியும் பார்த்தாச்சி.. வெளுத்தும் பார்த்தாச்சி.. காதல் கஜினி கைது..! கிப்ட் ஷாப் சேட்டைகள்

0 2135

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காதலர் தினத்தன்று காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை விரட்டிச்சென்று ஆடைகளை பிடித்து இழுத்து காதலிக்க வற்புறுத்திய கிப்ட்ஷாப் உரிமையாளர் 3 முறை தப்பிய நிலையில் 4வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். 

காதல் கெட்டா குட்டிச்சுவரு என்பது போல விட்டுச்சென்ற காதலியை நினைத்து உருகி உருகி அழுது ஆக்டிங் கொடுக்கும் இவர் தான் கிப்ட் ஷாப் காதல் கஜினி ராசிபன். தம்பிக்கு 25 வயசு தான் ஆவுது ஆனால் குளச்சல் பேருந்து நிலையத்தில் கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப் ஒன்றை வைத்துக் கொண்டு இவர் செய்யும் காதல் லூட்டிகளுக்காக ஏற்கனவே 3 முறை போலீசில் சிக்கி உள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மலிவு விலைக்கு விற்பனை செய்வதாக கூறி அவர்களுக்கு காதல் வலை வீசுவதும், பின்னர் அவரே அந்த வலையில் சிக்கி அவதிப்படுவதும் கடந்த கால வரலாறு என்கின்றனர் காவல்துறையினர்.

கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பார்த்து சிரித்த கல்லூரி மாணவிக்கு தங்க சங்கிலி, பரிசு பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த ராசிபன், காதலை தெரிவிக்க மாணவியின் வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு மாணவி ஆண் நண்பருடன் இருப்பதை பார்த்து சண்டையிட்டதால், அந்தப்பெண் விரட்டியடித்ததால், காதலோடு தங்கச்சங்கிலியும் போச்சி என்று குட்டிச்சுவர் அருகில் குத்தவச்சி குமுறும் நிலைக்கு தள்ளப்பட்டார் ராசிபன்

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருங்கல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலிக்க கட்டாயபடுத்தியதால் 2வது முறையாக போலீசில் சிக்கினார். 2022-ம் ஆண்டு மிடாலம் அருகே உள்ள கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டு சுவர் ஏறி குறித்து காதல் சொல்ல முயன்று மாணவியின் உறவினர்களிடம் தர்ம அடி வாங்கினார்.

கடந்த 3-வருடமாக காதலர் தினத்தன்று மாணவிகளிடம் காதல் பிரப்போஸ் செய்து கட்டாயப்படுத்துவதை வாடிக்கையாக செய்து போலீசாரிடம் சிக்குவதும், மாணவிகளின் நலன் கருதி பின்வாங்கும் பெற்றோர் எடுக்கும் முடிவால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியும் வந்தார் ராசிபன்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காதலர் தினத்தன்று பரிசு பொருள் வாங்க வந்த கல்லூரி மாணவியிடம் காதலை வெளிப்படுத்திய ராசிபனுக்கு ராசி சரியில்லை போல... அந்தப்பெண் இவரது காதலை காலால் உதறிச்செல்ல... விரட்டிச்சென்று அந்த பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து ராசிபன் குரங்கு சேட்டை செய்ததால் தற்போது 4வது முறையாக போலீசில் சிக்கினார்.

காதல் கஜினி ராசிபன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்றிரவு கிப்ட் ஷாப் ஐ திறக்க வந்த ராசிபனை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். அவரை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலர் தினத்தன்று காதலியை தனது மனசிறையில் அடைக்க நினைத்த ராசிபன், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments