காதல் பொது உடமை.. கஷ்டம் தனி உடமை.. 10 விக்கெட் மகாலட்சுமி.! முட்டுச்சந்தில் நிறுத்திய முகநூல் காதல்

0 2500

கடலூர் அருகே முகநூல் மூலம் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு நகை பணத்துடன் ஓடியதாக பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முகநூலில் காதலில் விழுந்த 10 பேரின் வாழ்க்கையை முட்டுச்சந்தில் நிறுத்திய எஸ்கேப் மகாலட்சுமி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஊருக்கு ஒரு இளைஞரை காதல் வலையில் வீழ்த்தி தனது காதலுக்கு டாப் டென் வரிசை வைத்த எஸ்கேப் மகாலட்சுமி இவர் தான்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அருள்ராஜ் . 24 வயதான இவர் முக நூலில் கணக்கு தொடங்கிய சில தினங்களிலேயே பெண் ஒருவர் முகநூல் கணக்கில் நண்பராக இணைந்தார். தன்னை வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்று அறிமுகம் செய்துகொண்ட அந்தப்பெண் மெசேஞ்சரில் காதல் போதை ஏற்றி அன்பை பொழிந்ததால் வலையில் சிக்கிய எலியானார் அருள்ராஜ்.

திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவிக்க மகாலட்சுமியை , பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 23 ந்தேதி பண்ருட்டி அடுத்த திருவதிகை கோவிலில் வைத்து அருள்ராஜ் திருமணம செய்து கொண்டார் . 4 மாதம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக மகாலட்சுமி கூறியதை நம்பி அருள்ராஜ் குடும்பத்தினர் ஐந்தாவது மாத சீர்வரிசைகள் எல்லாம் செய்து மகாலட்சுமியை குஷிப்படுத்தி உள்ளனர்.

திடீரென ஒரு நாள், மகாலட்சுமி தனது பள்ளி தோழிக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி சென்னைக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். அருள்ராஜ் வீட்டில் இருந்த 6½ பவுன் நகைகள், 83 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றதாகவும், மீண்டும் திரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது. தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்ற மகாலட்சுமி சில மாதங்கள் கழித்து தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக கூறி வாட்ஸ் அப்பில் புகைப்படம் ஒன்றை அனுப்பி அருள்ராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நேரில் பார்க்க வருவதாக கூறிய நிலையில் இருதினங்கள் கழித்து அந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி யூ டர்ன் அடித்துள்ளார் மகாலட்சுமி . இதனால் பதறி போய் அவர் கொடுத்த முகவரிக்கு சென்ற போது, அது தவறான முகவரி என்பதும், மகாலட்சுமி தன்னை போன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றும் பெண் என்பதும் தெரியவந்தது.

அந்த வகையில் அருள் ராஜ் அவரது 9-வது காதல் விக்கெட் என்பதும் இந்த இடைப்பட்ட காலத்தில் பத்தாவது ஆக ஒருவரை காதலில் வீழ்த்தி மகாலட்சுமி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அருள்ராஜ் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முகநூலில் நேரத்தை கழிக்கும் விவசாய மற்றும் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து காதல் வலை விரித்து அவர்களை திருமணம் செய்து கொள்ளும் மகாலட்சுமி, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது. மகாலட்சுமி பிடிபட்டால் தான் அவர் மேலும் என்னென்ன காதல் திருவிளையாடல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவரும் என்று கூறும் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments