கோவிலில் பீரோவை உடைத்து டயர்டானதால் அங்கேயே படுத்து குறட்டை விட்ட திருடர்..! வீடியோ எடுப்பது கூட தெரியாமல் உறக்கம்..!

0 2364

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் சுற்று சுவரை எகிறி குதித்து கோவிலில் புகுந்த கொள்ளையன் பீராவை உடைத்து பார்த்து சோர்வடைந்து கோவிலிலேயே படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பீரோவில் பணம் நகையும் இருக்கும் என்று நினைத்தால் பழைய காலண்டர்கள் மட்டுமே இருந்ததால் திருடருக்கு ஏற்பட்ட விரக்தி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கோவிலுக்குள் பட்டு பீதாம்பரத்தில் பக்குவமாக படுத்து உறங்குகிறாரே இவர் தான் அந்த வினோத திருடர்..!

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயம் உள்ளது . இன்று காலை வழக்கம் போல கோவிலின் வெள்ளிப்பக்க கதவை திறந்து பூசாரி உள்ளே நுழைந்த போது நெற்றில் பட்டையுடன் கோவிலுக்கு உள்ளே இளைஞர் ஒருவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்

அப்படியே கொஞ்சம் தள்ளி இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு பாதியாக திறக்கப்பட்டிருந்தது

அந்த பீரோவுக்குள் இருந்த பழைய காலண்டர் மற்றும் பழைய காகிதங்கள் வெளியே சிதறிக்கிடந்தது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடியோ எடுப்பது கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த திருடரை போலீசார் எழுப்பினர். தன்னை சுற்றி போலீஸ் நிற்பதை பார்த்து பம்மிய அவர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.

சம்பவத்தன்று இரவு சுவர் ஏறிக்குதித்து கோவிலின் உள்ளே புகுந்ததாகவும், அங்கு இருந்த பீரோவில் நகையும் பணமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் சில மணி நேரம் போராடி திறக்க முயன்றதாகவும், முழுவதுமாக திறக்க இயலாத அந்த பீரோவில் பழைய காலண்டர் காகிதங்களும் சில துணிகளும் இருப்பதை கண்டு பெருத்த ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்த அந்த திருடர், பீரோவை திறக்க முயன்று சோர்வடைந்ததால் பீரோவில் இருந்து எடுத்த துணியை விரித்து படுத்து உறங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

நகை பணம் ஏதனையும் கொள்ளையடித்துச்செல்லாமல் அங்கேயே படுத்து உறங்கியதால் காரணத்தால் திருடர் மனநல பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகித்த எம் கே பி நகர் போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர்.

மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அந்த திருடர் மீது நடவடிக்கை மேற்கொள்வதா ? அல்லது சிகிச்சைக்காக மன நல மருத்துவமனையில் சேர்ப்பதா ? என்று முடிவெடுக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments