தீவிரவாதிகளின் கொடூரமுகம்.. புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் 4வது நினைவு தினம்..!

0 1135
தீவிரவாதிகளின் கொடூரமுகம்.. புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் 4வது நினைவு தினம்..!

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்தது. தீவிரவாதிகளின் கொடூர முகத்தையும், அவர்களை வேரோடு அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

காஷ்மீர்.... அழகும் அமைதியும் நிரம்பியிருந்தது ஒரு காலம்.. பாகிஸ்தானின் கைங்கர்யத்தால் அரை நூற்றாண்டு காலமாக தீவிரவாதச் செயல்கள் அரங்கேறும் இடமாக மாறியது. பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும், பாகிஸ்தானின் பல்வேறு தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சண்டைகளை நிகழ்த்தி வருகின்றன.

பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பல்வேறு தாக்குதல்கள் நடந்திருந்தாலும் கடந்த 2019ம் ஆண்டு இதே நாள் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே அதிர வைத்தது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் படை போலீசார் சென்று கொண்டிருந்தனர்.

புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் கிராமப்புறச் சாலையில் இருந்த ஒரு சிறிய கார் வேகமாக வந்து துணை ராணுவப்படையினர் சென்ற ஒரு பேருந்து மீது மோதி வெடித்துச் சிதறியது

தாக்குதல் நடத்தியது யார்...? என்ன நடக்கிறது...? என்பது புரிவதற்குள் இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். கொடூரமான புல்வாமா தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. உலகிற்கு அகிம்சையைப் போதித்த இந்தியா இந்த விஷயத்திலும் அமைதியாக இருக்கும் என்று உலக நாடுகள் நினைத்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வண்ணம் அடுத்த 12வது நாள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.

இந்தியா வலியச் சென்று எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை என்றபோதும், சீண்டினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உலகிற்கு பறைசாற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments