4 ஏடிஎம்-களை உடைத்து கொள்ளை.. வெல்டிங் கொள்ளையர்கள் கைவரிசை.. கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படை

திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, சுமார் 75 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெரு, போளூர் பேருந்து நிலையம் மற்றும் தேனிமலை ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்கள் மற்றும் கலசப்பாக்கத்தில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவற்றை, கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி, நள்ளிரவில் அடுத்தடுத்து உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்த லட்சக்கணக்கிலான பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஷட்டரை மூடிவிட்டு, அலாரம் உள்ளிட்டவற்றை நிறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கைரேகை, வீடியோ பதிவை வைத்து போலீசார் தங்களை கண்டறியக்கூடும் என்பதால், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் DVR உள்ளிட்டவற்றை கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி தீ வைத்து மர்ம கும்பல் எரித்துள்ளனர்.
மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இருந்து சுமார் 20 லட்ச ரூபாயும், தேனிமலை ஏடிஎம்மில் இருந்த 32 லட்ச ரூபாயும், போளூரில் இருந்த ஏடிஎம்-ல் இருந்து 18 லட்ச ரூபாயும், கலசப்பாக்கத்தில் இருந்த ஏடிஎம்-ல் 3 லட்ச ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, ஆந்திர பதிவெண் கொண்ட காரில் கொள்ளையர்கள் வந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வேலூர், செங்கம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மாநில எல்லைகளிலும், தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கையையும், விடுதிகளில் சோதனையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், நேரில் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், ஏடிஎம் இயந்திரங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் குழுவாக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, கொள்ளை நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில் தேனிமலை பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து 32 லட்ச ரூபாயும், பின்னர் 02.30 மணியளவில் மாரியம்மன் கோவில் 10வது தெருவில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், அதிகாலை 03.15 மணிக்கு கலசப்பாக்கம் இந்தியா ஒன் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாயும், 03.50 மணிக்கு போளூர் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் 18 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டதாக, போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Comments