வீடுகளை இழந்த 53 லட்சம் பேர்.. சிரியாவில் சோகம்..!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்குப் பின் ஆறு நாட்களில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறைய வைக்கும் பனியில், கடும் குளிரில் தங்க இடமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
துருக்கியின் ஹாத்தே நகரில் நடத்தப்பட் மீட்புப் பணியில் கடந்த 5 நாட்களாக உணவு, நீர் இன்றி உயிருக்குப் போராடிய பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
108 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான ஹாத்தே நகரத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இடிபாடுகளில் சிக்கியுள்ள தனது உரிமையாளருக்காக அதே நகரில் நாய் ஒன்று 5 நாட்களாக உணவு, நீரின்றி இருப்பது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
காரமன்மாரஸ் நகரின் சாலைகள் மற்றும் வெளிப்புறப் பகுதியில் நிலம் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளவுபட்டுக் கிடக்கிறது.இந்த நிலையில் தெற்குத் துருக்கியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பெருந்தீயை அணைக்கும் பணியில் விமானம் ஈடுபட்டுள்ளது
சிரியாவின் ஜெப்லே நகரில் கட்டட இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரு சகோதரர்கள் மீட்புப் படையால் உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு படையினர் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர்.
நிலநடுக்கத்தால் சிரியாவில் மட்டும் 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நிலநடுக்கம் காரணமாக 180 நாட்கள் தளர்த்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
Comments