துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு

0 1754

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மீட்புப் பணியின் போது இடிபாடுகளுக்கு நடுவே துர்நாற்றம் வீசுவதால் மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. இடிபாடுகளின் நடுவே துர்நாற்றம் வீசுவதாக மீட்புப் பணி வீரர்கள் கூறுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால், கடும் குளிரை சமாளிக்க வீதிகளில் நெருப்பை மூட்டி குளிர் காய்கின்றனர்.

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள ஹாத்தே நகரத்தின் இடிபாடுகளில் இருந்து கொசாவா நாட்டு மீட்புப் படையினர் 2 வயது குழந்தையை உயிருடன் மீட்டனர்.

ஹாத்தே நகரத்தின் முக்கியமான இணைப்புச் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டும், பல இடங்களில் இரண்டாகப் பிளந்தும் சாலைகள் காணப்படுகின்றன.

துருக்கியின் அடியமன் நகரில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவனை உயிருடன் மீட்டபோது, அருகில் இருந்தவர்கள் இறைவன் மிகப் பெரியவன் என முழக்கமிட்டனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஸ்கென்டுரன் மற்றும் அதனா நகரங்களை அதிபர் எர்டோகன் பார்வையிட்டார். அப்போது அவசரகால சேவைகள் மிகவும் மந்தகதியில் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அரசு சிக்கல்களை எதிர் கொண்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிலநடுக்கத்தினால் முற்றிலும் சிதைந்து போன சிரியாவின் அலெப்போ நகரில் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றனர்.

துருக்கி, சிரிய எல்லை நகரமான க்ளைவ்கோஸூவில் நகரில் ஏராளமான சடலங்கள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ட்ரக்குகளிலும், வாகனங்களிலும் வரிசை வரிசையாக ஏற்றப்படுகின்றன.

ஹராஸ்தா நகரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு நடுவே யாரேனும் பிழைத்துள்ளனரா என மீட்புப் பணி வீரர்கள் இரவு நேரங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments