வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடும்பத்தினருக்கு பரிகாரம் செய்வதாக கூறி நகை திருடிய இளைஞர்..!

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடும்பத்தினருக்கு பரிகாரம் செய்வதாக கூறி, மயக்க மருந்து கலந்த மயிலிறகால் அடித்து, ஒரு சவரன் தங்க தோடை திருடிச்சென்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
ஹரிதா என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மந்திரவாதி, தங்களின் கணவர், குழந்தைகளுக்கு நேரம் சரியில்லை என்றும், பரிகார பூஜை செய்யாவிட்டால் விபத்துக்கு உள்ளாவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அப்பெண், அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். அந்நபர் ஹரிதாவை மயிலிறகால் அடித்ததும், அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
நினைவு திரும்பியதும் தனது ஒரு காதில் இருந்த, தோடு காணாமல் போனது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.
அந்நபர் ஹரிதாவின் தோடை திருடியதை ஒப்புக்கொண்டதுடன், அதை வேலூரில் உள்ள தனது வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நகையை மீட்க போலீசார், ரவிக்குமாரை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Comments