தூங்கா விழிகள் நிலா பெண்ணே நீயே தெய்வம்... சிறுமியை போற்றும் பாரம்பரியம்..!
வேடசந்தூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தூங்கா விழிகள் கொண்ட சிறுமியை நிலா பெண்ணாக அலங்கரித்து பூஜை செய்தனர். பெண் குழந்தையை தெய்வமாக போற்றும் பாரம்பரியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நிலவை பெண்ணாக வர்ணித்த சினிமா கவிஞர்கள் மத்தியில் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து தெய்வமாக வழிபடுவதை திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த சரளிமலையை சுற்றி வசிக்கும் கிராமத்து மக்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்
அந்தவகையில் வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பதற்காக நிலாபெண் வழிப்பாடு நடந்தது
இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் ஏழு நாட்கள் தங்கள் வீடுகளில் இருந்து பல வகை சாதம் தயார் செய்து மாசடச்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்
எட்டாவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த சிறுமியான சர்வ அதிஷ்டா என்ற 10 வயது சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்
திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை
கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்று ஆவாரம் பூக்களை பறித்து, பூக்களை மாலையாக்கி நிலா பெண்ணான சிறுமியை அலங்கரித்தனர்.
ஆவாரம் பூக்கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக கோட்டூருக்குள் அழைத்து வரப்பட்டார்
மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மியடித்து ஆண்களும், பெண்களும் பாட்டு பாடி சிறுமியை போற்றி கும்மிப்பாட்டு பாடினர்
பின்னர் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்துச்சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்து அதில் சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர்
அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்று, ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டு அதன் மீது மண் கலயத்தில் தீபம் ஏற்றி சிறுமியை வழிபட செய்தவுடன் கிராம மக்கள் ஊர் திரும்பினர்.
அந்த விளக்கு ஏழு நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியம் மாறாமல் இந்த வினோத வழிபாட்டை பெண்களை தெய்வமாக போற்றும் வகையில் சுற்றுவட்டார கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments