சண்டேன்னா சரக்கா..? பணிக்கு சென்ற பெண்ணுக்கு மது கொடுத்த மேனேஜர்..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி பெண் ஊழியரை வரவைத்து போதை பொருள் கொடுத்து மயங்க செய்த இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன விற்பனையாகம் அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் மேலகரம் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கணினி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற நிலையில் ஷோரூம் மேனேஜர் தங்கராஜ் என்பவர் தன்னை பணிக்கு வரச் சொன்னதாக கணவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
சில மணி நேரங்கள் கடந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எதற்காக வரச் சொல்லியிருப்பார் ? என்ற சந்தேகத்தின் பேரில் மனைவியை செல்போனில் அழைத்துள்ளார்.
அந்தப்பெண் உளரிய நிலையில் கணவரிடம் பேசியதால் உடனடியாக சோரூம் சென்று பார்த்த போது உள்ளே மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் அருகில் மேனேஜர் தங்கராஜ் உள்ளிட்ட சிலர் நின்றுள்ளனர்.
இது குறித்து அங்கு உள்ளவர்களிடம் விசாரித்ததில் அந்தப்பெண்ணுக்கு போதை பொருள் கொடுத்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக உறவினர்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து, மயக்க நிலையில் கிடந்த பெண்ணை தூக்கி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு குடிநீரில் போதை வஸ்து கலந்து கொடுத்திருப்பதாக தெரியவந்த நிலையில் மேனேஜர் தங்கராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், அந்த பெண்ணுக்கு தண்ணீரில் பெண்கள் அருந்தும் மதுவை கலந்து கொடுத்ததாக கூறியதால் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அந்தப்பெண் விருப்பப்பட்டு மது அருந்தினாரா ? அல்லது அந்தப்பெண்ணுக்கு தெரியாமல் மது கொடுக்கப்பட்டதா ? என்பது தெரியவந்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Comments