நெல் கொள்முதலில் தளர்வு தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக டெல்டா பகுதிகளில் பெய்த பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நடப்பு நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டுமென, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த மழையால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மழையால் தானியத்தின் ஈரப்பத அளவு அதிகமாக இருக்குமென விவசாயிகள் கவலை அடைவதால், 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிப்பதோடு, முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லை கொள்முதல் செய்வதற்கான வரம்பை 3லிருந்து 5 சதவீதமாகவும், சேதம், நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்களின் கொள்முதல் வரம்பையும் 5லிருந்து 7சதவீதமாகவும் தளர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments