‘கான சரஸ்வதி’ வாணிஜெயராம் இசைப்பயணம்..!
இந்திய திரை உலகில் கான சரஸ்வதியாக புகழப்பட்ட பழம் பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார் அவருக்கு வயது 78. தமிழகத்தின் வேலூரில் பிறந்து இந்திய இசை ரசிகர்களின் மனதில் மல்லிகையாய் மனம் வீசிய வாணி ஜெயராமின் இசைப்பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
சென்னை ராணி மேரிக்கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தாலும் திருமணத்துக்கு பின்னர் கணவர் ஜெயராமின் ஊக்குவிப்பால் 1971 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமானவர் வாணிஜெயராம்..!
தமிழகத்தில் இருந்து சென்று இந்தியில் வெற்றிக்கொடியை நாட்டிய வாணி ஜெயராமை தமிழ் இசையமைப்பாளர்கள் மணக்கும் மல்லிகையாய் மனம் வீசச்செய்தனர்
ஒவ்வொரு பாடலையும் உள்ளத்தின் அடியில் இருந்து உணர்வு பூர்வமாக பாடுவதில் வல்லவர் வாணி ஜெயராம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்று அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை உருகவைத்தது
டுயட் பாடல்களில் அவரது குரல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்
தமிழில் எம்.எஸ். விஸ்வ நாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களிடம் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார்
தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, பெங்காளி என 19 மொழிகளில் 10ஆயிரம் பாடல்களை கடந்து பாடி இருந்தாலும் அவர் பாடிய பக்தி பாடல்கள் இன்றும் பிரபலமானவை
கான சரஸ்வதியாக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம் 3 தேசிய விருதுகள், 4 மாநில அரசுகளின் விருதுகளை பெற்றவர். ஏராளமான பாரட்டுக்களை பெற்ற அவருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது
வாணிஜெயராம் மறைவுக்கு தமிழ் திரை உலகினர், இசை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாணிஜெயராமின் மறைவு இந்திய இசை உலகிற்கு பேரிழப்பு என்றாலும் அவரது காந்தக் கானங்களால் அவர் குரல் என்றென்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும்..!
Comments