விருப்பப்பட்டே குண்டுக்கட்டா கட்டி தூக்கிட்டு போனாங்களா..? என்னென்ன சொல்றாங்க பாருங்க..!
தென்காசி அருகே உறவினர்களால் கடத்தப்பட்ட காதல் திருமணம் செய்த குஜராத் பெண்ணை மீட்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தன்னை யாரும் கடத்தவில்லை என்று அந்தப்பெண்ணை பேச வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்..
தென்காசி மாவட்டம், கொட்டாகுளம் பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்த வினீத் - கிருத்திகா ஜோடியை விரட்டிய பெண் வீட்டார், வினீத்தை தாக்கி விட்டு கிருத்திகாவை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டு கடத்திச்சென்றனர்.
கிருத்திகா பயந்து ஓடுவது மற்றும் அவரது கைகால்களை பிடித்து தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கவும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜன் என்பவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பெண் வீட்டாரின் சொல்பேச்சுக் கேட்டு காதல் தம்பதியினரை விசாரணைக்கு என்று வீட்டிலிருந்து வெளியே வர வைத்தது கடத்தலுக்கு காரண கர்த்தாவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலெக்ஸ் ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை தாய் சகோதர்கள் உறவினர்கள் என 7 பேர் மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் , கடத்தப்பட்ட கிருத்திகாவை பேச வைத்து வீடியோ ஒன்றை கடத்திச்சென்றவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி நான் திருமணம் முடித்து சந்தோசமாக இருப்பதாகவும், என்னை வைத்து ஏதேனும் பிரச்சனை நடைபெற்றால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று அந்தப்பெண் கூறுவது போன்று உள்ள அந்த வீடியோவை போலீசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மேலும் 31 ந்தேதி கிருத்திகாவை அவரது உறவினர் ஒருவருக்கு 2 வது திருமணம் முடித்து வைத்ததோடு அன்றே அதனை சட்டபூர்வமாக பதிவும் செய்துள்ளனர்.
இதை மறைப்பதற்காக கடந்த வருடம் அக்டோபர் மாதமே கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். தங்கள் மீதான கடத்தல் வழக்கை நீர்த்துக் போகசெய்யும் விதமாக இந்த செயல்களை பெண் வீட்டார் செய்திருப்பதாக வினீத் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே,கிருத்திகாவின் வீடியோவை காவல்துறை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், கடத்தப்பட்ட கிருத்திகாவை நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments