3 பேரை கொன்று புதைத்த கொடூர கொலையாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!
சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா நகர், போரூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாகத்தி ரவுடி கும்பலின் தலைவனை பெங்களூருவில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரை கொன்று புதைத்த கொடூர கொலையாளி போலீசில் சிக்கிய பின்னணனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கடந்த டிசம்பர் மாதம் திருவல்லிக்கேணி, அண்ணா நகர் மற்றும் போரூர் பகுதிகளில் பட்டாக்கத்தியுடன் திரிந்த 8 பேர் கும்பல் மக்களை அச்சுருத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்றது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் போலீசில் சிக்கிய நிலையில் இந்த பட்டாக்கத்தி ரவுடி கும்பலின் தலைவன் இளங்கோ மட்டும் சிக்கவில்லை. அவனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
பெங்களூருவில் பதுங்கி இருந்த இளங்கோவை சுற்றி வளைத்து தூக்கி வந்த போலீசார் நடத்திய விசாரணையில் காதலியை பிரித்து விட்டனர் என்பதை காரணம் காட்டி நள்ளிரவில் அவன் செய்த பல கொடூர செயல்கள் அம்பலமானது.
செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்த ரவுடியான இளங்கோ, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது காதலி தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல காரணமாக இருந்தவர் என்று திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்ரீதர் என்பவரை நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக தாக்கி தப்பி உள்ளான்.
இளங்கோ தலைமறைவானதால் இளங்கோவின் நண்பரான நரேஷை மட்டும் அப்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கெம்மராஜபுரம் கிராமத்தில் மூன்று இளைஞர்களை கொலை செய்து ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட வழக்கில் ஒரு ஆண்டு கழித்து இளங்கோ மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் .
சிறையில் இருந்த இளங்கோ சமீபத்தில் நீதிமன்ற பிணையில் வெளியே வந்ததும் மீண்டும் பட்டாகத்தியை கையில் எடுத்து பல்வேறு பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
தனது காதலியை தன்னிடமிருந்து பிரித்த ஸ்ரீதரை கொலை செய்யும் நோக்கில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதிக்கு தனது கூட்டாளிகளோடு சென்றுள்ளான். அப்போது ஸ்ரீதர் வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவன் வழியில் டீக்கடையில் நின்ற முகம்மது ஹர்ஷத் என்ற இளைஞரை பட்டா கத்தியால் வெட்டி மொபைல் போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கி உள்ளான்.
அன்று இரவே அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதும் அதற்கு அடுத்தடுத்த தினங்களில் திருமங்கலம், போரூர் போன்ற பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள A கேட்டகிரி ரவுடியான இளங்கோ மீது சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 3 கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில்
கைது செய்யப்பட்ட ரவுடி இளங்கோவிடம் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments