துணிவு படம் பார்த்து ஐ.ஓ.பி வங்கியில் நுழைந்து கொள்ளை முயற்சி..! பெப்பர் கன்னுடன் அட்ராசிட்டி

0 1585

திண்டுக்கல் அருகே பட்டப் பகலில் வங்கிக்குள் பெப்பர்ஸ்பிரே கன்னுடன் புகுந்து , ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். துணிவு படம் பார்த்தவரின் துணிச்சலான கைவரிசை.. 

திண்டுக்கல் , தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் செவ்வாய்கிழமை காலை ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே கன், கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார்.

கண் எரிச்சலில் அவதிப்பட்ட 3 வங்கி ஊழியர்களையும் பிளாஸ்டிக் டேக்கை கொண்டு கைகளை கட்டிப்போட்டு, வங்கி லாக்கருக்குள் இருந்த பணத்தை கொள்ளைஅடிக்க முயன்ற போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே தப்பி வந்து அலறி கூச்சல் போட்டார்.

இதையடுத்து வங்கிக்குள் நுழைந்த பொதுமக்கள் கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்து அவன்சி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொள்ளையனை அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில் அவன், திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் என்பதும், துணிவு படம் பார்த்து வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அப்படியே அள்ளிச்சென்று விடலாம் என்ற திட்டத்தில் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் ஒரே கொள்ளையில் வாழ்க்கையில் செட்டிலாக திட்டமிட்டதாகவும் அவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நகர் மேற்கு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரித்தார்.

உண்மையிலேயே படம் பார்த்துதான் இந்த செயலில் இறங்கினாரா ? அல்லது வேறு யாரும் இந்த கொள்ளை முயற்சியின் பின்னணியில் உள்ளனரா ? என்ற கோணத்தில் அவர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் துணிச்சலுடன் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments