ராணுவ வீரரின் சேட்டை திருமணத்தை நிறுத்திய 'ஷேர் சாட்' காதலி..!

0 6046

கன்னியாகுமரி அருகே 'ஷேர் சாட்' என்ற செல்போன் செயலி மூலம் அறிமுகமாகி காதலித்து ஏமாற்றிய ராணுவவீரரின் திருமணத்தை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மணப்பெண் வீட்டுகே சென்று தடுத்து நிறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 24-வயதான எம்.சி.ஏ பட்டதாரிப் பெண்ணும், தக்கலை சாரோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான சுபின் என்பவரும் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் ஷேர் சாட் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்தனர்.

காதலிக்கத் தொடங்கியதும், ஒருவருக்கொருவர் செல்போன் நம்பரைப் பகிர்ந்து கொண்டு நேரடியாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

பெண்ணின் பெற்றோரிடம் நேரடியாகச் சென்ற சுபின், அவர்களின் மகளை காதலிப்பதாகக் கூறி பெண் கேட்டுள்ளார். பெண்ணின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்ததால் அந்தப்பெண்ணின் வீட்டிற்கே சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார். மகனின் எல்லை தாண்டிய காதல் விவகாரம் சுபினின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பை மீறி இருவரும் டெலிகிராமில் பேசி வந்த நிலையில், சென்னையில் ராணுவப் பணியில் இருந்த சுபின், சொந்த ஊருக்கு வருவதாக காதலிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் கடந்த ஒரு மாதமாக அந்தப் பெண்ணிடம் சுபின் சரியாக பேசாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது

இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது சுபினுக்கு வேறொரு பெண்ணுடன் ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான திருமண அழைப்பிதழ்களும் உறவினர்களுக்கு வழங்கி திருமண முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சுபினின் வீட்டிற்குச் சென்று காதலி முறையிட்டதை, சுபினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டுகொள்ளாமல் துரத்தியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த அந்தப்பெண் ஞாயிற்றுக்கிழமை மாலை மணப்பெண் வீட்டிற்குச் சென்று, சுபினை தான் காதலிப்பதைக் கூறி இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை காண்பித்து, தங்கள் இருவரும் தாலி கட்டாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததையும் விவரித்துள்ளார். இதையடுத்து மறுநாள் தங்கள் பெண்ணுக்கும் சுபினுக்கும் நடக்க இருந்த திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தினர்.

சுபின் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ராணுவ வீரர் சுபின் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த ராணுவவீரர் சுபின் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments