மார்பிலும், தூக்கி வளர்த்த புள்ள போச்சேன்னு கதறும் தந்தை ..! ஜல்லிக்கட்டு காளை முட்டி சிறுவன் பலி

0 3215

ஜல்லிக்கட்டு பார்க்க போன சிறுவன் காளை முட்டி பலியான சம்பவம் தர்மபுரி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாடுபட்டு வளர்த்த மகனை பறிகொடுத்து விட்டு கதறி அழுத பெற்றோரின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தருமபுரி அடுத்த தடங்கம் கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர்

வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து பிடிபடாமல் வெற்றிபெற்ற காளைகளுக்கும் , காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து ஜல்லிக் கட்டு போட்டியை ரசிக்கும் வகையில் காலரி அமைக்கப்பட்டிருந்தது.

பாலக்கோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் - கவுரி தம்பதியரின் 13 வயது மகன் கோகுல், தனது மாமாவுடன் ஜல்லிக்கட்டு போட்டியை காண தடங்கம் கிராமத்திற்கு சென்றிருந்தார்

காலரியின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கோகுல் ஒவ்வொரு காளைகளையும் கண்டு உற்சாக மடைந்தார்.

காளைகளை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் காலரியை விட்டு இறங்கிச்சென்ற கோகுல், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பிடித்து வந்து காளையின் உரிமையாளர்கள் வாகனத்தில் ஏற்றும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அடுத்த நொடியே அந்த சிறுவனை காளை ஒன்று முட்டி தூக்கி வீசியதில் விலாவில் பலத்த காயம் அடைந்தார்.

பலத்த காயமடைந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் கோகுல் பரிதாபமாக பலியானார்.

மருத்துவமனை படுக்கையில் சடலமாக கிடந்த தங்கள் மகனை தொட்டுப் பார்த்து அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் வேதனையில் கதறி அழுதனர்

அங்கு வந்த மருத்துவர் மற்றும் காவலாளிகள் மற்ற நோயாளிகளின் நலன்கருதி உறவினர்களை வெளியே அனுப்பி வைத்த நிலையில் மாரிலும், தோளிலும் தூக்கிப் போட்டு வளர்த்த தனது மகனை இழந்து விட்டதாக கோகுலின் தந்தை சீனிவாசன் கண்ணீர் விட்டு கதறினார்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு போதிய பாதுகாப்பில்லை என்று குற்றஞ்சாட்டிய சிறுவனின் தந்தை சீனிவாசன் தனது மகனின் சாவுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்றார்

போதிய பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாகவும், சிறுவன் காயம் அடைந்த சிறிது நேரத்தில் அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விழாகுழுவினர் விளக்கம் அளித்தனர்.

குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்வோர் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக கையில் பிடித்துக் கொள்ள தவறினால் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சோகச் சம்பவம் சாட்சியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments