100 ரூபாய் மெத்தனம் ரூ.65 ஆயிரம் அபராதம் எஸ்.பி.ஐ வங்கிக்கு அடி..! அலைக்கழித்ததால் கிடைத்த ஆப்பு

0 48876

சென்னை சவுகார் பேட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், வாடிக்கையாளர் ரசீதில் குறிப்பிட்ட தொகையை காட்டிலும் 100 ரூபாய் கூடுதலாக அடுத்தவர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விட்டு வாடிக்கையாளரை அலைக்கழித்ததால் 65 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும் நிலைக்கு வங்கி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ந்தேதி சென்னை சவுகார்பேட்டை குடோன் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு நண்பர் ஒருவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தச்சென்றார்.

900 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய கூறி ரசீது மூலம் எழுதிய அவர் இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியின் காசாளரிடம் கொடுத்தார். ரசீதை சரியாக பார்க்காத அந்த வங்கி ஊழியரோ ஆயிரம் ரூபாயையும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விட்டார்.

மீதி பணம் 100 ரூபாயை நிர்மல் குமார் திருப்பிக் கேட்ட போது, ஆயிரம் ரூபாயும் டெபாசிட் செய்து விட்டதாகவும் , டெபாசிட் செய்யப்பட்ட நபரிடமே சென்று வாங்கிக் கொள்ளும் படியும் மெத்தனமாக கூறி உள்ளார். வங்கி மேலாளரிடம் புகார் அளித்த நிலையில் அவரும் புகாரை தட்டிக் கழித்துள்ளார்.

இதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சர்குலர் ஆபீஸ் வரை சென்று புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து மும்பை அலுவலகத்திற்கு தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

100 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் அலைந்து திரிந்து ஏமாற்றத்துடன் மன உளைச்சலில் இருந்த நிர்மல் குமார், செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, இழப்பீடாக 50000 ரூபாயும் வழக்கு செலவுக்காக 15 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தமாக 65 ஆயிரம் ரூபாயை நிர்மல் குமாருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

100 ரூபாய் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு ஆயிரக்கணக்கில் வசூலிப்பதை வாடிக்கையாக செய்து வரும் எஸ்.பி.ஐ வங்கிக்கு, அதே பாணியில் 100 ரூபாய்க்கு வட்டிக்கு வட்டி போட்டது போல மொத்தமாக 65,000 ரூபாயை வாடிக்கையாளருக்கு அள்ளிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments