50 பெண்களிடம் அத்துமீறல்.. போலி போலீஸ் மீது நிஜ போலீஸ் துப்பாக்கிச்சூடு..! ADSP வெள்ளத்துரை ஆன் ஃபயர்

0 4152

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் ஊழியரை, போலீஸ் எனக்கூறி விசாரணைக்கு அழைத்துச்சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். சம்பவத்தன்று தண்டளம் சாலையோரம் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார் .

அங்கு காக்கிச்சீருடையில் வந்த இருவர் தங்களை காவல் துறையினர் எனக்கூறி மிரட்டி உள்ளனர். அந்தப்பெண்ணை விசாரிக்க வேண்டும் என்று தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பான புகாரின் பேரில் காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகரின் உத்தரவின் பேரில் ஏ.டிஎஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் விசாரணைக்கு களமிறக்கப்பட்டனர்,

செல்போன் தொடர்புகளை வைத்து அடையாளம் கண்ட தனிப்படை போலீசார் செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் என்கிற நாகா, பிரகாஷ் ஆகியோரை சுற்றிவளைத்தனர்.

அவர்கள் போலீசாரை நோக்கி ரிவால்வாரால் சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர் . இதையடுத்து தனிப்படை போலீசார் 3 ரவுண்டு சுட்டனர். இதில் நாகராஜ் காலில் துப்பாக்கிக் குண்டு பய்ந்தது. பிரகாஷ் தப்பிச்செல்ல குதித்த போது தவறி விழுந்து இரு முட்டி எலும்பும் உடைந்ததாக கூறப்படுகின்றது.

இருவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் தாலுகா பெரியார் நகரில் 21 வயது மதிக்கத்தக்க பெண்ணிடமும் நள்ளிரவு 11:30 மணிக்கு போலீஸ் எனக்கூறி அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளியூர்களில் இருந்து வந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, சுங்குவார் சத்திரம், ஒரகடம், மாம்பக்கம், வல்லம் - வடகால் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்றுவிட்டு காதலர்களுடன் சுற்றும் பெண்கள் தான் இவர்களின் குறி என்றும் 50 க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீஸ் என மிரட்டி பணம் பரித்ததோடு, விசாரணை என்ற பெயரில் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த போலி போலீஸ் கொள்ளையர்களிடம் இருந்து அரிவாள் கத்தி, ரிவால்வார், வாக்கிடாக்கி, இரு சக்கரவாகனங்கள், இரும்பு ராடுகள், கையுறை, முகமூடி, கட்டர், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கூட்டுப்பாலியல் பலாத்கார அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments