தொட்டுப்பார்..! ஜரூராக தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்.!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாரம்பரிய நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சியளித்து வருகின்றனர்..
தமிழ்நாடு, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக ஜல்லிக்கட்டு போட்டிகள் திகழ்கின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியை வீர விளையாட்டாக மட்டுமல்லாமல், நம் பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கும் அம்சமாகவும் பார்க்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சங்க காலம் முதலே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக, அத்தக்கருப்பன், அழுக்குமறையன், ஆணறிகாலன், மறைச்சிவலை உள்பட 87 வகையான நாட்டு மாடுகளை நம் முன்னோர்கள் வளர்த்து வந்துள்ளனர்.
இவற்றில் பல நாட்டு மாட்டு இனங்கள் அழிந்த நிலையில், காங்கேயம், புலிக்குளம் உள்ளிட்ட சில நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கூறுகின்றனர்.
அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில், ஏராளமான காளைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்கும் நாட்டு மாடுகள் மட்டுமே களமிறக்க அனுமதிக்கப்படவுள்ளன.
மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டுள்ள காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், புலிக்குளம் வகை காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுககாக தயார் செய்து வருகிறார்.
திமிலை பிடிக்க வரும் காளையர்களிடம் பிடிபடாமல், திமிறிச் செல்லும் வகையில், பிடிபடாத மாடாக இருக்க தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், அவற்றுக்கு உணவுக்கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுகிறது.
Comments