முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு - மஸ்தான் சகோதரர் கைது

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே 5 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில், சொத்து தகராறு காரணமாக, மஸ்தானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அவரது சகோதரர் ஆதாம்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, பைனான்சியரிடம் பணம் பெற போவதாக கூறி,சென்னையில் இருந்து செங்கல்பட்டு அழைத்துச்சென்று, மஸ்தானை அவரது தம்பி மருமகன் இம்ரான் உள்பட 5 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மாமனாரும், மஸ்தானின் சகோதரருமான ஆதாம்பாஷா, மஸ்தானிடம் கடனாக வாங்கிய 5 லட்ச ரூபாயை திருப்பிக்கேட்டு தொந்தரவு கொடுத்ததாலும், குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனார் ஆதம்பாஷவுக்கு எழுதி கொடுக்க மஸ்தான் தடையாக இருந்ததாலும், அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
திட்டத்தின்படி, மஸ்தானுடன் நெருங்கி பழகி, அவரை காரில் வெளியே அழைத்துச்சென்று, தனது நண்பர்களுடன் கொலை செய்ததாக இம்ரான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கின் ஆறாவது குற்றவாளியான மஸ்தானின் சகோதரர் ஆதாம்பாஷாவை, போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், வாக்குமூலத்தை பதிவு செய்து, ஆதாம்பாஷாவை சிறையில் அடைத்தனர்.
Comments