இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில், சிறைக் காவலர்கள் இரண்டு பேர் கைது..!

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய புகாரில், சேலம் மத்திய சிறைக் காவலர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் பேருந்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரவு பேருந்தில் படுத்து இருந்தபோது அவரை நான்கு பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது புகாரளித்த பெண், இந்த வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அருண், சிவசங்கர் ஆகிய சிறைக்காவலர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மத்திய சிறைக்காவலர் குடியிருப்பிற்கு தன்னை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வருவதாகவும் அந்தப் பெண் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா வழக்கு குறித்து விசாரிக்க அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் லட்சுமி பிரியாவுக்கு உத்தரவிட்டார் .
இதனையடுத்து நேற்று இரவு தீவிர விசாரணை நடந்தது. பின்னர் இன்று அதிகாலை சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிறை காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த வார்டன்கள் அருண் மற்றும் சிவசங்கர் ஆகியோரை கைது செய்து மூன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments