19 கிலோ கஞ்சாவை தின்ற காவல் நிலைய எலிகள் கோர்ட்டில் கிலியான போலீசார் ..! இப்படின்னா.. கஞ்சாவை ஒழிப்பது எப்படி ?
சென்னை கோயம்பேட்டில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்களிடம் கைப்பற்றப்பட்ட 30 கிலோ கஞ்சாவில் 19 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டதாக கூறிய போலீசார், 11 கிலோ கஞ்சாவை மட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கஞ்சா தின்ற காவல் நிலைய எலிகளால், கிலியான போலீசார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஞ்சா மறைத்து வைத்திருந்து விற்றதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக சிஎம்பிடி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கிற்கான ஆவணங்களையும் சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்பிடி போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையிலும், குற்ற பத்திரிக்கையிலும் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்தது 30 கிலோ என குறிப்பிட்டிருக்க, நீதிமன்றத்தில் சமர்பித்த போது, 19 கிலோ கஞ்சா குறைந்தது எப்படி என நீதிபதி கேள்வி எழுப்ப, குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்து, பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாகவும் அதனால் மழையால் பாதிக்கப்பட்டு எலிகளால் கடிக்கப்பட்டு அதன் அளவு குறைந்துவிட்டது என சி.எம்.பி.டி போலீசார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தனர்.
கஞ்சாவை காவல் நிலையத்தில் உள்ள எலிகள் தின்றுவிட்டதாக, போலீசார் அளித்த நூதன பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதி, இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதே போன்று உத்தரப்பிரதேச மாநில, மதுரா காவல்துறையினர் 2018 -ம் ஆண்டு 581 கிலோ கஞ்சாவை கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறிய மதுர மாவட்ட போலீசார் 581 கிலோ கஞ்சாவையும் எலிகள் தின்று விட்டதாக கூறியது நகைப்புக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
தற்போது அதே பாணியில் சென்னை காவல்துறையில் உள்ள சிஎம்பிடி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதாக பதில் அளித்ததால் குற்றத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கஞ்சாவை தின்ற காவல் நிலைய எலிகளை நினைச்சாதான் பயமாக உள்ளது என்று இணையத்தில் மீம்ஸ்கள் வலம் வர தொடங்கி உள்ளன
Comments