புத்தாண்டு இரவில் பிரியாணி சாப்பிட்ட மாணவி மரணம்..! அவதிக்குள்ளான அந்த 7 நாட்கள்..!
புத்தாண்டு இரவு மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட கல்லூரி மாணவி, உணவே விஷமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரும்பாலாவை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக குழி மந்தி பிரியாணி, சிக்கன் 65, மயோனஷ் ஆர்டர் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளார்.
உடன் சாப்பிட்ட 4 பேர் நலமுடன் இருந்த நிலையில் அஞ்சு ஸ்ரீக்கு மட்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டது. புட் பாய்சன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 7 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை அஞ்சு ஸ்ரீ உயிரிழந்தார்.
பிரியாணி சாப்பிட்ட 5 பேரில் மாணவி மட்டும் பலியானது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்ட சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி அஞ்சு ஸ்ரீ சாப்பிட்ட மந்தி பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமை மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்ததால் தரமற்ற பிரியாணியை விற்பனை செய்த அந்த ரெஸ்டாரண்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள், ஓட்டலின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே கோழிக்கோடு உணவகத்தில் உணவு அருந்திய கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ரேஷ்மி ராஜ் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
ஒரே வாரத்தில் இரண்டு பேர் தரமற்ற உணவால் உயிரிழந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments