நம்பர் இல்லா காரில் நகர்வலம் வந்த TTF வாசனுக்கு போலீஸ் ஷாக்.. கார் போச்சா.. அப்படியே போயிரு..!
சென்னை வடபழனியில் பைக்கர் TTF வாசன் பந்தாவாக வந்திறங்கிய நம்பர் இல்லாத XUV7oo காரை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். செல்லும் மிடமெல்லாம் சிறப்படி வாங்கும் தங்கத்திற்கு புத்தாண்டில் போலீஸ் கொடுத்த ஷாக் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
எப்போதும் அவரது ரசிகர்களாலும் அவர் ஓட்டிச்செல்லும் பைக்குகளாலும் வழக்குகள் வாங்குவதை வழக்கமாக கொண்ட TTF வாசனுக்கு இந்த புத்தாண்டு வேறு விதமாக விடிந்துள்ளது, பைக்கில் போனால் தானே பிரச்சனை என்று காரில் செல்வதாகவும் எப்படி பிரச்சனை வருது பார்க்கிறேன் ? என்று வீடியோவும் ஒன்றை வெளியிட்டிருந்தார்
இந்த நிலையில் சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரைப்படம் ஒன்றின் புரமோசனுக்காக பைக் யூடியூப்பர் TTF வாசனை அழைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நம்பர் ஏதும் இல்லாத வெள்ளை நிற XUV7oo காரில் பந்தாவாக வந்திறங்கினார் வாசன்..!
வாசன் செல்லுமிடமெல்லாம் செல்பி எடுக்க குவியும் தங்கங்களை கட்டுப்படுத்த முன்னேற்பாடாக 10 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பவர் ஸ்டார் போல தனது ரசிகர்களிடம் அவர் முன் கூட்டியே தெரிவிக்காததால் ரசிக தங்கங்கங்கள் எவரையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அங்கு காணவில்லை..!
இந்த நிலையில் நம்பர் இல்லாத காரில் நகர்வலம் வந்த குற்றச்சாட்டில் TTF வாசன் வந்த காரை பறிமுதல் செய்த வடபழனி போக்குவரத்து போலீசார் காரை காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர்
இது குறித்து தகவல் அறிந்த TTF வாசன், செய்தியாளர் சந்திப்பில் படம் பார்க்க வந்தது குத்தமாய்யா என்று நொந்து கொண்டார். அருகில் இருந்த அந்த படத்தின் ஹீரோவோ, தனது பட விளம்பரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரை அதிகம் பேசவிடாமல் தடுத்தார்
இதற்க்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், TTF வாசனின் கூட்டாளி பிரவீனின் உறவினரான பெங்களூரை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கார் எனவும் கடந்த ஜூலை மாதம் வாங்கப்பட்ட இந்த காரை கடந்த 3 மாதங்களாக பிரவீன் , ttf வாசனுக்காக நம்பர் இல்லாமல் ஓட்டி வந்தது தெரியவந்தது. போலீசாரிடம் ரசிகர்கள் தொல்லையால் அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்காக காரில் நம்பர் பிளேட் வைக்கவில்லை என்று பிரவீன் சமாளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
அதிவேகமாக பைக்கில போனாதான் பிரச்சனை என்று காரில் போனார்... இப்ப அந்த காரும் போச்சி... போலீசிடம் இருந்து தம்ப்பிக்க பேசாம கைபுள்ள பாணியதான் பின்பற்றனும் போல என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் யூடியூப்பர் TTF வாசன்
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல , போலீசுக்கு நம்பர் இல்லா காரை வாரி கொடுத்துவிட்டு வாகனம் இன்றி தவித்த தம்பி TTF வாசனை கருப்பு நிற காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். காரில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததற்கு 500 ரூபாயும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி வந்ததற்காக 5000 ரூபாயும் சேர்த்து 5500 ரூபாய் பிரவீனிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இவ்வளவு ரணகளத்திலும் அங்கு வந்த தனது ரசிக தங்கங்கள் இருவருடன் செல்பி எடுத்துக் கொடுத்துவிட்டுச்சென்றார் TTF வாசன்...!
Comments