காத்துவாக்குல 2 காதல்.. மாமா குட்டியை ஏவி கணவனை தூக்கிய மனைவி..! கொலையில் தப்பிய எக்ஸ்

0 5805

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்து புதரில் வீசிவிட்டு, மாயமானதாக நாடகமாடிய மனைவி, சிப்காட் சூப்பர்வைசருடன் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லட்சுமி காந்தன். இவரது மனைவி ராஜேஸ்வரி . கடந்த வாரம் குடும்ப தகராறு காரணமாக கோபத்தில் வெளியே சென்ற கணவர் லட்சுமி காந்தன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்று ராஜேஸ்வரி உறவினர்களிடம் தெரிவித்தார்.

வீட்டின் அருகில் உள்ள வயல்வெளி புதரில் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த லட்சுமி காந்தனை, 4 நாட்களில் கழித்து கண்டுபிடித்த பெரணமல்லூர் போலீசார், விசாரணையை முன்னெடுத்தனர். ராஜேஸ்வரியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர், இரு ஆண்களிடம் நீண்ட நேரம் பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஸ்வரியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காதல் ஆசையால் நிகழ்ந்த பயங்கரம் அம்பலமானது. ராஜேஸ்வரி அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நிலையில், வீட்டில் அவரது விருப்பத்துக்கு மாறாக, லட்சுமி காந்தனுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 குழந்தைகள் உள்ள நிலையிலும், முன்னாள் காதலனுடன் தனது தொடர்பை செல்போன் மூலம் ராஜேஸ்வரி தொடர்ந்து வந்துள்ளார்.

சில மாதங்களாக ராஜேஸ்வரி செய்யாறு சிப்காட்டில் உள்ள காலனி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற போது, சூப்பர் வைசர் உதயசூரியன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. ராஜேஸ்வரிக்காக பணத்தை தண்ணீராக செலவு செய்து பல பரிசுகளை வாங்கி கொடுத்துள்ளான் உதய சூரியன். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட லட்சுமி காந்தன், அவரை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி உள்ளார்.

ராஜேஸ்வரியை காணாமல் தவித்த உதய சூரியன், வீட்டுக்கே தேடி வந்த நிலையில் , அவரை தான் வேலைபார்க்கும் நிறுவன ஆபீசர் என அறிமுகப்படுத்தி, கணவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். உதயசூரியனும் அடிக்கடி வீட்டிற்கு வந்து அவருக்கு மது வாங்கி கொடுப்பதை வழக்கமாக்கி உள்ளான். கணவரை தீர்த்துக்கட்டிவிட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராஜேஸ்வரி ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

சம்பவத்தன்று மைத்துனர் பாண்டியன், உதயசூரியன் , லட்சுமி காந்தன் ஆகிய மூன்று பேரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் சரிந்து கிடந்த லட்சுமி காந்தனின் கழுத்தை அறுத்து கொலை செய்து , 3 பேரும் சேர்ந்து உடலை அருகில் உள்ள வயல்வெளி புதரில் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜேஸ்வரி , உதயசூரியன், பாண்டியன் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 2 பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

முன்னதாக இந்த கொலையை, முன்னாள் காதலனை வைத்து முடிக்க ராஜேஸ்வரி திட்டமிட்ட நிலையில், செல்போனில் காதல் மொழி பேசுவதோடு நிறுத்திக் கொண்ட அந்த எக்ஸ் காதலன் உஷாராக இருந்து எஸ்கேப் ஆனது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments