அழகும் பணமும் ஆபத்து.. கணவனால் சுட்டுக் கொல்லப்பட்ட நடிகை..! 2 1/2 வயது குழந்தை சாட்சியானது
மனைவியான நடிகையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக நாடகமாடிய சினிமா தயாரிப்பாளரை, போலீசார் கைது செய்தனர். தாயின் கொலைக்கு இரண்டரை வயது குழந்தை சாட்சியான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ரியாகுமாரி... ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும், யூடியுபருமான இவரது கணவரும் சினிமா தயாரிப்பாளருமான பிரகாஷ்குமார் ஹவுரா போலீசுக்கு செல்போன் மூலம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.
தனது மனைவி ரியாகுமாரி மற்றும் 2 1/2 வயது மகளுடன் கவுரா தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் இயற்கை உபாதையை கழிக்க தான் காரில் இருந்து இறங்கி சென்ற போது, அங்கு வந்த 3 கொள்ளையர்கள் துப்பாக்கியைக்காட்டி மிரட்டியதாகவும், அதனை தடுக்க வந்த தனது மனைவி ரியாகுமாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர்கள் தப்பிச்சென்று விட்டதாகவும் பிரகாஷ்குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
குண்டடிப்பட்ட மனைவியை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற நிலையில், அந்தப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகளின் உதவியுடன் ரியா குமாரியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். ரியாகுமாரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரகாஷ் குமார், தனது மகளை தோளில் சாய்த்தபடி, தனது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறி பரிதாபமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததுடன், ரியா குமாரின் 2 1/2 வயது மகளிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரகாஷ்குமார் தெரிவித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதற்கிடையே தங்கள் மகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிரகாஷ்குமார் மீதே தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ரியாகுமாரியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ்குமாரை பிடித்து விசாரித்த போது, மனைவி தன்னை விட அழகான பிரபலமாக இருப்பதாலும், அதிக அளவு பணம் சம்பாதிப்பதாலும், தன்னை மதிக்கவில்லை என்று சண்டையிட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் லாங் டிரைவ் போகலாம் என்று அழைத்துச்சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து மனைவி ரியாகுமாரியை சுட்டுக்கொலை செய்து, காரில் தூக்கிபோட்டு எடுத்து வந்து, தனது மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. பிரகாஷ்குமாரை கைது செய்த போலீசார், ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில அடைத்தனர்.
Comments