முகநூலில் முக்கோண காதல் பேக் ஐடி மூலம் சிக்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!
போலி முக நூல் கணக்கில் வேறு ஒரு ஆண் போல காதலியுடன் சாட்டிங் செய்து , அவரை தனிமையான இடத்துக்கு வரவழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வடசேரிக்கரையில் அரங்கேறி இருக்கின்றது. வேலிதாண்டிய வெள்ளாடான காதலியை திட்டமிட்டு பலி தீர்த்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி..
கேரள மாநிலம் வர்க்கலா அருகே வடசேரிக்கரையைச் சேர்ந்த 17 வயதான பதின் பருவ சிறுமி ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவில் கழுத்து அறுபட்ட நிலையில் தனது வீட்டுக்கதவை தட்டிய படி கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் அதிர்ந்து போய் எழுந்து வந்து பார்த்த போது, தங்கள் மகள் ரத்தம் சொட்ட உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு மிரண்டு போயினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமைக்கு யார் காரணம் ? என்பதை சொல்லி விட்டு அந்த சிறுமி பரிதாபமாக பலியானார்.
சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரித்த போது முப்பொழுதும் முக நூலில் மூழ்கியதால் சிறுமிக்கு ஏற்பட்ட முக்கோண காதலால் நிகழ்ந்த கொடூர தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த சிறுமியை பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்ற இளைஞர் முகநூல் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.
இடையில் அந்தப்பெண் தன்னைத் தவிர வேறு சில ஆண்களுடன் முகநூலில் நெருங்கிப்பழகுவதாக கோபுவுக்கு சந்தேகம் எழுந்தது.
அதைத்தொடர்ந்து கோபு, முகநூலில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு ஏற்படுத்தி அந்தச்சிறுமியுடன் நட்பு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட அந்தப்பெண் அகிலுடன் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டு காதலில் விழுந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் அகில் ஐடியில் இருந்து நேரில் சந்தித்து பரிசு தர வேண்டும் என விருப்பம் தெரிவித்ததை ஏற்ற அந்த சிறுமி, நள்ளிரவில் தனது வீட்டருகே வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் அந்தப்பெண் வீட்டருகே தலையில் ஹெல்மெட்டுடன் கோபு காத்திருந்தான்.
அகிலை காணும் ஆவலில் அங்கு வந்த காதலி, தலைக் கவசத்துடன் நின்ற காதலனிடம் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை எனக் கூறி தலைக்கவசத்தை அகற்றுமாறு கூறியுள்ளார்.
தலைக்கவசத்தை அகற்றியதும் அது முதல் காதலன் கோபு என்பது தெரிந்து அந்த சிறுமி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.
காதலன் தான் இருக்க , மற்றொருவனை சந்திப்பதற்காக நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியே வருவாயா ? என்று ஆத்திரம் கொண்ட கோபு, அவள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகம் உறுதி செய்யப்பட்டதாகக் கருதி கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு அவளது செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
காதலன் கோபுவை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து செல்போனை கைப்பற்றி அவர்களது சாட்டிங் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
Comments