புத்தாடை அணிந்து காவிரியில் உயிரை மாய்த்த விபரீத குடும்பம்..! சிறு வயது நீரிழிவு நோயால் சோகம்..!
7 வயது மற்றும் 5 வயது மகள்கள், அடுத்தடுத்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதால் இரு மகள்களையும் காவிரி ஆற்றில் தூக்கி வீசிவிட்டு கணவன் மனைவியும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு சென்னம்பட்டி வனப்பகுதியையொட்டி உள்ள காவிரி ஆற்றில் 2 பெரியவர்கள் மற்றும் 2 சிறுமிகள் என 4 பேரது சடலங்கள் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
சடலங்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்த நிலையில், உறவினர்களுக்கு எழுதிய தற்கொலை கடிதம் மூலம் விபரீத முடிவுக்கான காரணம் அம்பலமானது.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதி சேர்ந்தவர் யுவராஜ் - பான்விழி தம்பதியினருக்கு 7 வயதில் நிதிக்ஷா என்ற மகளும், 5 வயதில் அக்சரா என்ற மகளும் இருந்தனர்.
யுவராஜ் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி டைல்ஸ் கடையிலும் வேலை செய்து வந்தனர்.
7 வயது சிறுமியான நிதிஷாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்காக அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி அக்ஷராவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாகவே யுவராஜ் தம்பதியினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி தவித்து வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் நீரிழிவி நோயால் சிரமப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள்களுக்கு புத்தாடை அணிவித்து வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ் தம்பதியினர், தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காவிரி ஆற்றில் 2 மகள்களையும் தூக்கி வீசி கொலை செய்ததோடு, தாங்களும் குதித்து விபரீதமாக உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில் சிறிய வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்காக பெற்றோர்கள் அஞ்சதேவையில்லை என்று விளக்கிய மருத்துவர், இது ஒரு நோயே அல்ல என்றும், ஊசிக்கு அஞ்சாமல், நவீன முறையில் பேனா வடிவிலும், உடலில் பொறுத்தக்கூடிய ஆட்டோமெடிக் பம்பு போலவும் இன்சுலின் செலுத்தும் வசதி வந்து விட்டது என்றும், முறையாக மருந்துகள் எடுத்துக்கொண்டால் 80 வயதுவரை வாழலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments