உழைக்காமல் சீக்கிரமாக கோடீஸ்வரனானது எப்படி..? வேலைக்காரன் பார்த்த வேலை..! இரு அப்பார்ட்மெண்ட்ஸ் அபேஸ்..!

0 4286
உழைக்காமல் சீக்கிரமாக கோடீஸ்வரனானது எப்படி..? வேலைக்காரன் பார்த்த வேலை..! இரு அப்பார்ட்மெண்ட்ஸ் அபேஸ்..!

செல்வந்தர் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்து 16 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளையே அபகரித்து, கோடீஸ்வரனான ஆசாமியை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டு வேலைக்காரரின் நடிப்பை விஸ்வாசம் என நம்பி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்த தொழிலதிபரின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை சூளைமேடு கில்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் 65 வயதான தொழிலதிபர் ஜெயராம். இவர் துபாயில் மேன்பவர் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஜெயராமிற்கு, சென்னையில் பல்வேறு சொத்துக்கள் இருந்தன.

தொழிலதிபர் ஜெயராம் வீட்டில் சரவணன் என்பவர் வேலைக்காரராக இருந்தார். நீண்ட காலமாக விசுவாசமாக இருப்பது போல தன்னை காட்டிக் கொண்ட சரவணனை, குடும்ப உறுப்பினர் போல் நடத்திய ஜெயராமன், சரவணனின் குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்காக பல லட்சங்கள் கொடுத்தும் உதவினார். இந்த நிலையில் ஏராளமான தொழில்கள் துபாயில் இருந்ததால் ஜெயராம் குடும்பத்தோடு துபாய்க்கு இடம் பெயர்ந்தார்.

அவருக்கு சொந்தமான இங்குள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் வீடு ஆகியவற்றை, சரவணனை நம்பி பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு சரவணனும் வாழ்க்கையில் முன்னேறி செல்வந்தராக மாறுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தனக்கு சொந்தமாக சூளைமேடு கில் நகர் 2வது தெரு பகுதியில் உள்ள நிலத்தில், 16 வீடுகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வதற்கு ஜெயராம் அனுமதித்தார்.

அதில் வரும் லாபத்தில் 50 / 50 என பிரித்துக்கொள்வோம் என்று எடுத்துக் கொள்ளுமாறு சரவணனுடன் ஒப்பந்தமும் செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வாக்கில் நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள 16 வீட்டையும் கட்டி முடித்த சரவணன், அந்த வீடுகள் இதுவரை விற்பனை ஆகவில்லை என்றே தெரிவித்து வந்துள்ளார்.

ஏழு வருடம் கடந்து சென்னைக்கு வந்து ஜெயராமன் பார்த்துபோது சரவணன் அத்தனை வீடுகளையும் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் சூளைமேட்டில் உள்ள மற்றொரு சொகுசு வீட்டையும் போலி ஆவணம் மூலம் மாற்றியதையும் கண்டுபிடித்துள்ளார்.

வெளிநாடு செல்வதற்கு முன், தனது பங்களாவில் 14 சொகுசு கார்கள் வைத்திருந்ததாகவும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் வீட்டில் வைத்திருந்ததாகவும், மொத்தமாக 11 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் சரவணன் மோசடி செய்து கோடீஸ்வரனாக மாறியதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக மோசடி செய்த பணத்தில், லார்ட் பாலாஜி என்கிற பெயரில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வரும் சரவணன், தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அபகரித்து மோசடியாக விற்று, பல்வேறு சொத்துக்களை குவித்துள்ளதும் ஜெயராமுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து சரவணனிடம் ஜெயராம் கேட்டபோது செய்த மோசடிக்கு மன்னிப்பு கேட்டு, தான் மோசடி செய்த அனைத்து சொத்துக்களையும் திருப்பித் தருவதாக கூறி பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் சொன்னபடி சரவணன் மோசடி செய்த சொத்துக்களை திருப்பித் தராமல் வருடக்கணக்கில் ஏமாற்றியதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் சரவணன் மற்றும் அவரது கூட்டாளி கிருஷ்ணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

ஜெயராமிடம் இருந்து 11கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துள்ள சரவணன், மொத்தமாக எவ்வளவு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்பது குறித்து, வருமானவரித்துறையின் உதவியுடன் கண்டறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments