ஆயக்கர் பவனில் அத்துமீறிய அதிகாரி.. ஆப்படித்த பெண்...! தூய்மை பணியாளர்ன்னா இளக்காரமா?

0 3544

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில், வருமானவரித்துறை அதிகாரி, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகமான ஆயக்கர் பவன் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரியும் மூத்த வரி விதிப்பு அதிகாரி அண்ணாநகரைச்சேர்ந்த  36 வயதான ரொக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன்.  இதே அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயது பெண் ஒருவரும், கடந்த 5 வருடங்களாக  தூய்மை பணியாளராக பணிபுரிகிறார்.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி ரொக்ஸ் தனது அறையை சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். அந்தப் பெண் அறையினுள் வந்து சுத்தம் செய்ய முயன்றபோது, ரொக்ஸ் அந்த பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்ததால், அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்துக்கொண்டு அறையை விட்டு ஓடியுள்ளார்.

பின்னர் ரொக்ஸ் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் பெண்ணின் புகாரை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என, பெண்ணிடம் உயரதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகும் அடங்காத ரொக்ஸ், அப்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு தகாத முறையில் பேசி தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சல் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் உள்ள எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண், வியாழக்கிழமை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இந்த புகார், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரொக்ஸ் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்ததால், ரொக்ஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், ரொக்ஸை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments