என்ன TTF வழிப்பறியா.? சாத்தானின் அடிமைகளுக்கு மாஸாக மாவுக்கட்டு..! கட்டபைன்னு சொல்லி, கட்டுபோட்ட சோகம்
காஞ்சிபுரத்தில் கஞ்சாகுடிக்க பணம் கேட்டு 8 பேரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளம் கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். TTF என்ற பெயரில் கத்தியுடன் கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த சாத்தானின் அடிமைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் குள்ளப்பன் நகர் பகுதியில் கடை நடத்தி வருபவர் விமல் . புதன்கிழமை இரவு இவரது கடைக்கு கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்கள் பட்ட கத்தியை நீட்டி கடைக்காரரை தாக்கி விட்டு கல்லாவில் இருந்த பணத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்டு கஞ்சா போதை ஆசாமிகள் தப்பி சென்றனர்.
இந்த கத்தி வெட்டுக் கும்பல் படாளம் தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவீதி, டோல்கேட், தேனம்பாக்கம், உள்ளிட பல்வேறு பகுதியில் 7 பெட்டிக்கடைக்காரர்கள் மற்றும் தனியாக சைக்கிளில் சென்றவர்களை மறித்து பட்ட கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு கல்லாவில் இருந்த 2000 முதல் 3000 வரையிலான பணத்தையும் செல்போன்களையும் பறித்துச்சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அவர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர்கள் வெட்டுக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். செல்போனை பறிகொடுத்தவர் வேறு ஒருவர் மூலம் தனது செல்போனை கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார் அதற்கு இந்த கொள்ளை சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய திருடன் தினேஷ்குமார் செல்போனில் எகத்தாளமாக பேசி உள்ளான்
போலீசாரின் விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சுற்றித்திரிந்த வந்த தினேஷ்குமாரை மடக்கிப்பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் 3 இளம் சிறார்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பல்சர் பைக் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் TTFஎன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தங்களை அதிவேக பைக்கர் TTF வாசனின் ரசிகர்கள் என்று கூறிய அந்த 4 கஞ்சாகுடிக்கிகளும் , கஞ்சா வாங்குவதற்கும், பைக்கில் ஊர் ஊராக சுற்றுவதற்கும் தங்களிடம் பணமில்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வழக்கு வாங்குவது தங்களுக்கு ஜவுளிக்கடையில் கட்டப்பை வாங்குவது போல என்று கூறிய TTF வாசனின் ரசிகரான திருடன் தினேஷ்குமார் வழுக்கி விழுந்ததில் வலது கை முறிந்தது. போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுகட்டு போட்டுவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தினந்தோறும் கஞ்சா போதை ஆசாமிகளால் அசம்பாவிதம், குற்றங்களும் நடைபெறுவதால் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...
Comments