அரசுப்பள்ளிகளை மேம்படுத்த "நம்ம ஸ்கூல் நிதித்திட்டம்

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை, தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் நோக்கில், "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" என்ற நிதியுதவி பெறும் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ரூபாய் நிதி அளித்தால் கூட, அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழும் நிலையில், சமூக பங்களிப்புடன், பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" என்ற நிதியுதவி பெறும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தினார்.
திட்டத்தின் இலச்சினையை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்தையும் அரசால் செய்ய முடியாது என்றும், மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், இத்திட்டத்திற்கு நிதியுதவி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த முதலமைச்சர், ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் கூட, அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
அரசு பள்ளிகளில் கட்டிட வசதிகள், ஆய்வகங்கள், கழிவறை, நூலகங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த, முன்னாள் மாணவர்கள், தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் நிதி உதவியை எதிர்நோக்கி, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நபராக தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக, முதலமைச்சர் வழங்கினார்.
நம்ம ஸ்கூல் அமைப்பின் தலைவராக தொழிலதிபர் வேணு சீனிவாசன், நல்லெண்ண தூதராக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிதி அளிப்பதற்காக. http://www.nammaschool.tnschools.gov.in/என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள சுமார் 37 ஆயிரம் அரசுப்பள்ளிகள் இந்த இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த பள்ளிகளுக்கு எத்தகைய வசதி தேவைப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் இதில் இருக்கும். விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்து, நிதி அளிக்கலாம். நிதி நன்கொடைக்கு, வரி விலக்கு பெறுவதற்கான ரசீது வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் எனும் சமூக பங்களிப்பு நிதியை வழங்கலாம்.
Comments