சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 73 வது பிறந்தநாள்.. சினிமா துறையில் அவர் கடந்து வந்த பாதையின் ஓர் தொகுப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இன்று 73 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். குவியும் வாழ்த்துகளுக்கு இடையே அவர் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
பேருந்து நடத்துனராக பெங்களூரில் பணியாற்றியவருக்கு எங்கிருந்து சினிமா ஆசை வந்ததோ தெரியவில்லை. தட்டுத் தடுமாறி கடைசியில் இயக்குனர் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு அபூர்வ ராகங்களில் அந்த இரும்பு கேட்டைத் திறந்து வரும் காட்சியில் தமிழகத்திற்கு புதிய சூப்பர் ஸ்டாராக வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த்.
சின்ன சின்ன வேடங்கள், கமலுக்கும் சிவகுமாருக்கும் விஜயகுமாருக்கும் ஜெய்சங்கருக்கும் இரண்டாவது நாயகன், வில்லன் என்று தனது கதாபாத்திரங்களை தனி நடிப்பாலும் ஸ்டைலாலும் செதுக்கிய ரஜினி மெல்ல மெல்ல முதலிடத்தில் இருந்த நாயகர்களை இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி முதலிடத்துக்கு வந்தார்
அரசியல், ஆன்மீகம், பஞ்ச் டயலாக், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, நடிப்பு ,பாசம் பந்தம் நட்பு என்று எந்த பாத்திரத்திலும் எத்தகைய உணர்ச்சியையும் மிகஅழகாக வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்தார் ரஜினி.
வயது முதிர்ந்து பெரிய நடிகர்கள் பின்வரிசைக்குப் போன போதும் எப்போதும் முன்வரிசையில் வசூல் மன்னராகவும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த கருப்புத் தங்கமாகவும் ஜொலிக்கிறார் ரஜினிகாந்த்.
இன்று ரஜினிக்கு பிரதமர் மோடி முதல் கடைசி ரசிகன் வரை மகிழ்ந்து வாழ்த்து சொல்லும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்ட இந்த எளிய மனிதர் இன்னும் பல தசாப்தங்களுக்கு பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துவோம்.....
Comments