நாக்பூரில் எய்ம்ஸ், கோவாவில் விமான நிலையம்.. பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு..!

0 1483

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

நாக்பூர் எய்ம்ஸ், கோவா மோபா சர்வதேச விமான நிலையத்தையும் நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாக்பூர் - பிலாஸ்புர் இடையிலான, நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயிலை, கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சுமார் 8 ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவிலான நாக்பூர் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

மேலும், சுமார் ஆறாயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரையிலான மெட்ரோ ரயிலில் பயணித்து, மாணவர்கள், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

அதேபோல், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாக்பூர் - ஷீரடி இடையிலான 520 கிலோ மீட்டர் தொலைவிற்காக முதற்கட்ட விரைவு சாலையை திறந்து வைத்த பிரதமர், நாக்பூரில் ஆயிரத்து 575 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அப்போது உரையாற்றிய அவர், குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள் என்றும், சில கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க முயற்சிப்பதாகவும் சாடினார்.

நாக்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, வரவேற்பு கூடத்தில், பிரதமர் மோடி டோல் இசைக்கருவியை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தார்.

நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற உலக ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், கோவாவில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத்தில் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம், டெல்லியில் தேசிய ஹோமியோபதி நிறுவனங்களையும் காணொலியில் தொடங்கி வைத்தார்.

மேலும், மோபா நகரில் 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோவாவின் 2ஆவது விமான நிலையத்தையும், பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அந்த விமான நிலையம், வரும் ஜனவரி 5ஆம் தேதியன்று செயல்பாட்டிற்கு வருகிறது.இதன் மூலம் நாட்டின் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments