சென்னையை நெருங்கும் 'மாண்டஸ்' புயல்..!

0 4750

சென்னையில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், மேற்கு - வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் நாளை நள்ளிரவில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வலுப்பெறும் புயல், நாளை வரை தீவிரப் புயலாகத் தொடரும் என்றும் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது. 

இது குறித்து பேட்டியளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், இன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், நாளை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயல், வலுகுறையாமல் புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments