114 கி.மீ வேகத்தில் முறுக்கிய பைக்கர் சறுக்கி விழுந்து சாலையில் சடலமானார்..! குறுக்கே வந்த குட்டியானை
சென்னை தரமணி பழைய மகாபலிபுரம் சாலையில் மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர், குறுக்கே வந்த சரக்கு வாகனம் மீது மோதி உயிரிழந்த காட்சிவெளியாகி உள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை எஸ்.ஆர்.பி யில் இருந்து தரமணியை நோக்கி பிரவீன் என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை முறுக்கிச்சென்றார்.
20 நொடியில் இருசக்கர வாகனத்தின் வேகத்தை 114 கிமீ என தொட்ட நிலையில் குறுக்கே குட்டியானை என்று அழைக்கப்படும் சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அதீத வேகம் என்பதால் தனது இரு சக்கர வாகனத்தில் பிரேக் அடிக்க முயன்று சாலையில் சறுக்கி எதிரே வந்த வாகனத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சடலமானார்
இந்த பைக் ரேஸ் சேட்டையை, பிரவீனின் பின் பக்கம் அமர்ந்து செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஹரி என்பவர் பலத்த காயத்துடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரியும் உயிரிழந்தார். சாலையில் கிடந்த ஹரியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் தறிகெட்ட வேகத்தில் பைக் ஓட்டிய காட்சிகள் பதிவாகி இருப்பதை வைத்து விபத்து எப்படி நடந்தது ?என்று கண்டுபிடித்தனர்
சொந்த காசில் சூனியம் வைப்பது போல தங்கள் செல்போனில் படம் பிடித்த படியே தறிகெட்ட வேகத்தில் வாகனத்தை இயக்கி அவர்களின் கோர மரணத்துக்கு அவர்களே சாட்சியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தரமணியை சேர்ந்த பிரவீனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் இரு சக்கர வாகனத்தின் உச்சகட்ட வேக திறனை பரிசோதித்த போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் இளைஞர்கள் இது போன்ற விபரீத பைக் சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
பைக்கின் உச்சக்கட்ட வேகத்தை பரிசோதித்து வீடியோ வெளியிடும் சில யூடிப்பர்களின் தூண்டுதலால் இளைஞர்கள் இத்தகைய விபரீதத்தை தேடிச்செல்வதாக சுட்டிக்காட்டிய வாகன ஓட்டிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments