டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ,சைரஸ் மிஸ்த்ரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

0 477

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சைரஸ் மிஸ்த்ரி தொடர்ந்த வழக்கை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

டாடா சன்ஸ் நிறுவன தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி ((Cyrus Mistry)), கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபரில் நீக்கப்பட்டார். சைரஸ் மிஸ்த்ரியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி, டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு வாக்களித்ததன் அடிப்படையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்த்ரி வழக்கு தொடர்ந்தார். டாடா டிரஸ்ட் தலைவர் ரத்தன் டாடாவின் தலையீடு காரணமாக, நிர்வாக சீர்கேடு ஏற்பட்டதாகவும், தொழில்-வணிகம் தொடர்பாக முடிவுகள் எடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மனுவில் சைரஸ் மிஸ்த்ரி குற்றம்சாட்டியிருந்தார்.

சிறுபான்மை பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் நசுக்கப்படுவதாகவும், பங்குகளின் விகிதாச்சார அடிப்படையில் இயக்குநர் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் மிஸ்த்ரி கோரியிருந்தார். இதன் மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சைரஸ் மிஸ்த்ரியின் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துவிட்ட தீர்ப்பாயம், அவரை டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்க இயக்குநர்கள் குழுவுக்கு அதிகாரமும் தகுதியும் இருப்பதாக தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments