1 மாதமாக திட்டம் போட்டு ஆர்.கே வீட்டில் கொள்ளை.. பணக்காரர்களாக ஆசைப்பட்டு சிக்கிய நேபாள கொள்ளையர்கள்..

0 1711

சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே வீட்டில் அவரது மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம், 2 விலை உயர்ந்த கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டதில், ஒரே நாளில் பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக கைதான நேபாள கொள்ளையர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணா. இயக்குனரும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அவர் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 10-ம் தேதி இரவு ஆர்.கே.வின் மனைவி ராஜி வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து ராஜியை கட்டிப்போட்டதுடன், பீரோவில் இருந்த 250 சவரன் தங்க நகை, 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த கடிகாரங்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆர்.கே வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கொள்ளையடித்த பணத்தை இரண்டாகப் பிரித்து மூட்டையில் கட்டிக் கொண்டு ஒரு கும்பல் வேலூர் வழியாகவும், மற்றொரு கும்பல் மும்பை வழியாகவும் நேபாளத்திற்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் நேபாளத்திற்கு தப்பிச்செல்ல முயன்ற முக்கிய நபர் உள்பட 3 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

விசாரணையில், நேபாளத்தை சேர்ந்த அனைவரும் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரிந்து குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும், வேலை முடிந்த பின்பு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதும் வழக்கமாக இருந்துவந்தது.

இரண்டு மாதத்திற்கு முன்பு மது அருந்தும்போது பட்டிணபாக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் கிருஷ்ணா, எவ்வளவு நாட்கள் இப்படியே வாழ்வது என புலம்பி உள்ளான்.

அப்போது நடிகர் ஆர்.கே வீட்டு காவலாளியான ரமேஷ், ஆர்.கே அவரது மகள் திருமணத்திற்காக நகைகள் மற்றும் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும், அதை கொள்ளையடித்தால் ஒரே நாளில் அனைவரும் செட்டில் ஆகிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளான்.

ஆர்.கே வீடு அமைந்துள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், எளிதாக ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பலில், 3 பேர் உள்ளே நுழைந்து காவலாளி ரமேஷ் உடன் அறையில் பதுங்கி இருந்த நிலையில், ஒரு கும்பல் வெளியே இருந்து நோட்டம் விட்டுள்ளது.

 கொள்ளையடித்தவைகளை வைத்து நேபாளத்திற்கு சென்று சொகுசாக வாழ ஆசைப்பட்ட போது போலீசார் கைது செய்துவிட்டதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments