காதலிக்கு பிறந்த நாள் பரிசாக உயிரைக் கொடுத்த விபரீத கல்லூரி மாணவர்..! ஆதரவின்றி தவிக்கும் பெற்றோர்
சென்னை அண்ணாநகர் அருகே பேச மறுத்த காதலிக்கு பிறந்தநாள் பரிசாக, கல்லூரி மாணவர் உயிரைத் தியாகம் செய்த விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. யார் கொடுக்கும் பரிசு மதிப்புமிக்கது என்பதை காட்டுவதற்காக மாணவரின் விபரீதச் செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சென்னை அண்ணாநகர் அடுத்த முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் மோகன். அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மோகன் சனிக்கிழமை வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நொளம்பூர் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் மகன் எதற்காக இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டான் என்பது தெரியாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறினார். வீட்டில் இருந்த மாணவர் மோகனின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், அந்த செல்போனில் இருந்து கடைசியாக அவர் பேசிய நம்பருக்கு தொடர்பு கொண்டனர்.
எதிர்முனையில் பேசிய பெண்ணை அழைத்து விசாரித்த போது அவர் மோகனின் காதலி என்பது தெரியவந்தது. அவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்குவதற்காக மாணவர் மேற்கொண்ட விபரீத முடிவு குறித்து உருக்கமான தகவல் வெளியானது
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மெரீனா கடற்கரையில் வைத்து மோகன் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது கேக்கை கடற்கரைக்கு வந்த சில மாணவிகளுக்கும் கொடுத்துள்ளார். அந்தவகையில் அவரிடம் கேக் வாங்கிச்சாப்பிட்ட மாணவி ஒருவருடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அடுத்த சில தினங்கள் கழித்து இருவரும் மீண்டும் யதார்த்தமாக மெரீனாவில் சந்தித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் செல்போன் மூலம் நட்பை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி உள்ளனர். ஒருவருக்கொருவர் புதுப் புது பரிசுகளைக் கொடுத்து காதலை வளர்த்துள்ளனர்.
காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று பரிசு கொடுத்து ஜாலியாக சுற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில் மோகனுக்கும் அந்த பெண்ணும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மோகனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சனிக்கிழமை அந்த பெண்ணின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதற்காக மோகன் அழைத்துள்ளார். அப்போது உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள் தருகிறேன் என்று மோகன் பேச்சை ஆரம்பிக்க, இதில் யார் கொடுக்கும் பரிசுக்கு மதிப்பு அதிகம் என்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உனக்காக உயிரையே தருகிறேன் என்று கூறிய மோகனை, சத்தம் போட்டு செல்போன் இணைப்பை அந்தப் பெண் துண்டித்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசாக உயிரையே கொடுக்க முடிவு செய்த மோகன் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரேக் அப் காதலி மீது தான் கொண்ட காதலை நிரூபிப்பதற்காக தனது பெற்றோர் மற்றும் எதிர்காலத்தை மறந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவரின் விபரீதச் செயலால் பெற்றோர் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Comments