அவரத்தான் மணப்பேன்.. வீம்புக்கு மல்லுக்கு நின்ற மாணவியை கொன்ற தாய்.. குடும்ப மானத்தை காப்பாற்ற விபரீதம்..!

0 2305

நெல்லையில் காதலனை மணந்தே தீருவேன் என்று அடம்பிடித்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுககனி. இவர்களது மகள் அருணா, கோவையில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

சமீபத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த அருணா சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் மூர்ச்சையாக கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுககனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள், 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு
சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நர்ஷிங் மாணவி அருணா, கல்லூரியில் படித்தபோது ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு, வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக, அவரது பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுககனி தனது மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவியின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலில் விழுந்த மகள் குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக, விரும்பியவனைத்தான் மணப்பேன் என்று, வீம்புக்கு மல்லுக்கு நின்றதால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஆறுமுகக்கனி, போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments