1000 ரூபாய்க்காக நிறைமாத கர்ப்பிணியை சாலையில் நிறுத்திய போலீஸ்..! டிரிபிள்ஸ் சென்றதால் கெடுபிடி
பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண் அழைத்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தின் சாவியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் பறித்துவைத்துக் கொண்டு, 1000 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி,கர்ப்பிணி பெண்ணை 1 மணி நேரத்தும் மேலாக சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி, இவரது மனைவி இலக்கியா. நிறைமாத கர்ப்பிணியான இலக்கியாவுக்கு, திங்கட்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, கணவர் மற்றும் உறவுக்கார பெண் கலை ஆகியோர், இலக்கியாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அழைத்து வந்துள்ளனர். அவர்களது இருசக்கர வாகனம் ஜிப்மர் மருத்துவமனை அருகே வந்தபோது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர், கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தது, விதி மீறல் எனக்கூறி, 1000 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் முரசொலி, தன்னிடம் பிரசவ வைத்திய செலவிற்கு மட்டுமே பணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத உதவி ஆய்வாளர் ஆறுமுகமோ, அபராதம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என, வாகன சாவியையும் பறித்து வைத்துக்கொண்டு, கர்ப்பிணி பெண் உட்பட மூவரையும், 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையோரம் காத்திருக்க வைத்துள்ளார்.
அங்கு சென்ற செய்தியாளர்கள், நடந்த சம்பவம் குறித்து தகவல் சேகரித்தனர். இதனை பார்த்து அங்கு வந்த தன்வந்திரி நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் பேசி, இரு சக்கர வாகனத்தின் சாவியை பெற்றுக்கொடுத்து, கர்ப்பிணி பெண்ணை அவரது கணவருடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
3 பேர் இருசக்கர வாகனத்தில் வருவது விதிமீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. விதி மீறலுக்காக அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தக்கூறி அனுப்பி வைத்திருக்கலாம், அல்லது கர்ப்பிணி பெண்ணை சாலையில் நிறுத்தி கெடுபிடி காட்டாமல், ஒரு ஆம்புலன்ஸை வரவைத்து மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்திருந்தால் கூட, இது பாராட்டத்தக்க நடவடிக்கையாக அமைந்திருக்கும் என்கின்றனர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
Comments