காசி - தமிழ் சங்கமம் தொடக்கம்.. வாரணாசியில் கோலாகலம்

0 3365

உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் 'காசி - தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிறப்பு வாய்ந்த தமிழ் பாரம்பர்யத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் கூட்டு பொறுப்பாகும் என வலியுறுத்தினார். 

காசிக்கும் - தமிழ்நாட்டிற்கு இடையிலான கலாச்சார மற்றும் பாரம்பர்ய தொடர்புகளை கொண்டாடும் வகையில் 'காசி - தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது. வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரகாட்டம் உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் - காசியின் பாரம்பர்ய சிறப்புகளை எடுத்துரைக்கும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில், 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இசை நிகழ்ச்சி நடத்திய இசையமைப்பாளர் இளையராஜா, நான் கடவுள் படத்தின் 'ஓம் சிவோகம்' பாடலை இசைத்து பரவசமூட்டினார்.

நிகழ்ச்சியில் 'வணக்கம் காசி - வணக்கம் தமிழகம்' எனக்கூறி பிரதமர் மோடி, தனது உரையைத் தொடங்கினார். காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்ட பந்தம் உள்ளதாகவும், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி கூறினார். மேலும், காசியின் வளர்ச்சியில் தமிழர்களுக்கும் பங்கு உள்ளதாகவும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் தேச ஒற்றுமையை வளர்க்கும் பணியை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் இன்று உத்தரபிரதேசம் வரை ஒலிப்பதாக கூறினார்.

சிறப்பு வாய்ந்த காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பிரமருக்கு எப்படி தோன்றியது என்பதைக் கண்டு வியப்பதாகவும், அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இளையராஜா குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments