விமானப் பணிப்பெண் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்ட்டி..! முகநூல் பழக்கம் முகத்தை அறுக்கும்

0 3934

காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். முகத்தை கிழித்த விபரீத முக நூல் பழக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப்பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கி அங்கு பயிற்சி பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று, சோனு இரவு பணி முடித்துவிட்டு அபுபேலஸ் ஓட்டல் பின்புறம் உள்ள தனது விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து மதுபான பாட்டிலை உடைத்து அந்த பெண்ணின் முகத்தில் கிழித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெணை தாக்கி கீழே தள்ளிவிட்டு அந்த இளைஞர் தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அந்தப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், வேப்பேரியை சேர்ந்த முகநூல் நண்பர் நவீன் என்ற இளைஞரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

ஆறு மாதத்திற்கு முன்பாக சோனுவுடன் முகநூலில் நண்பராக அறிமுகமான நவீன் , தான் கடற்படையில் பணிபுரிவதாக கூறி சோனுவுடன் பழகி வந்துள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு விமானப்பணிப்பெண் பயிற்சிக்காக சென்னை வந்த சோனுவை நேரில் சந்தித்து நட்பை நெருக்கமாக்கிய நவீன், வெளியிடங்களுக்கெல்லாம் சோனுவை அழைத்துச்செல்லும் அளவுக்கு பாய் பெஸ்ட்டியாக இருந்துள்ளார்

அண்மையில் நவீன் கடற்படை வீரர் அல்ல , சாதாரண ஒப்பந்த ஊழியர் என்பதை அறிந்ததும் பழகுவதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் நவீன், சோனுவிடம் தான் காதலிப்பதாக கூற, இதனை ஏற்க மறுத்த சோனு அதன் பின்னர் நவீன் உடனான சந்திப்பை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். முக நூல் நட்பையும் துண்டித்துள்ளார்.

இதையடுத்து தொலைபேசி மூலமாக சோனுவுக்கு, தொல்லை கொடுக்க தொடங்கி உள்ளார் நவீன் . இதற்கிடையே சோனு வேறு ஒரு இளைஞருடன் பழகுவதாக நண்பர்கள் கூறியதால் ஆத்திரம் அடைந்த நவீன் சோனுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தினமும் இரவில் பணிமுடிந்து சோனு தனியாக வருவதை ஒரு வாரமாக நோட்டமிட்ட நவீன் சம்பவத்தன்று மறித்து தன்னை திருமணம் செய்து கொள் என்று கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திட்டமிட்டபடி சோனுவை மதுபாட்டிலால் சரமாரியாக முகத்தில் அறுத்து விட்டு நவீன் தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

விமான பணிப்பெண்ணாக வேலை கிடைக்க போகும் திமிறில் தன்னை கழற்றி விட்டதால் அவருக்கு அந்த வேலை கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் அழகான முகத்தை பாட்டிலால் அறுத்து சிதைத்ததாக நவீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சைக்கோ காதலன் நவீனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபரீத முகநூல் பழக்கம், முகத்தை கிழிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் மற்ரும் ஒரு சாட்சி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments